நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.
நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.
தற்போது 59 வயதாகும் நடிகர் விவேக், நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுள்ள கலைஞராகவே பார்க்கப்பட்டார். தான் நடித்த படங்களிலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியதால், `சின்ன கலைவாணர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.
முற்போக்கான கருத்துகளை திரைப்படத்தில் பரப்பியதற்குப் பெயர் பெற்ற பழம் பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். விவேக்கின் நகைச்சுவைகளும் அப்படிப்பட்ட கருத்துகளைத் தாங்கி வந்ததாக கருதப்பட்டதால், அவர் சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என அக்கறை காட்டினார். இதுவரையில் 33,23,000 மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கோடி மரக் கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டிருந்தார் அவர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் நடிகர் விவேக்.
மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விவேக்கின் மறைவையறிந்து அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.