தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தொற்று இலவச தடுப்பூசி முகாமை ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரை 1 லட்சத்துக்கும் மேற்ப்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. மேலும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி சம்மந்தமாக வரும் எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம். எந்தவொரு ஆதாரமுமின்றி கரோனா தடுப்பூசி சம்மந்தமான வதந்திகளை பரப் பினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்டாயம் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி, இரவு நேரங்களில் ஊரடங்கை பின்பற்ற உள்ளோம், அதே போல, ஞாயிற்றுகிழமை தோறும் முழு ஊரடங்கை அமல்படுத்தவுள்ளோம். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வல்லம் கரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதுடன், தொடர்ந்து மருத்துவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், கும்ப கோணம் அருகே கோவிலாச் சேரியிலும், பட்டுக்கோட்டை தமிழ் நாடு குடிசைமாற்று குடியிருப்பு வாரியத்திலும் இந்த வார இறுதிக்குள் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், தற்போது 963 படுக்கைகளில் தொற்றளாளர்கள் தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.
தஞ்சாவூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் அறிவழகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி.ஹேமசந்த் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.