சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில்,சென்னை பெருநகரில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட, சென்னை பெருநகர காவல் அனைத்து சரகங்களிலும், காவல் அதிகாரிகள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 29.4.2021 அன்று காலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில், மெரினா, காமராஜர் சாலை, காந்தி சிலை அருகே நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் காவல் ஆளிநர்களின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி காந்தி சிலை சந்திப்பில் தொடங்கி ராதாகிருஷ்ணன் சாலை, கத்தீட்ரல் சாலை, அண்ணா ரோட்டரி, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டர்லிங் பாய்ன்ட், சேத்துப்பட்டு பாயின்ட், குருசாமி பாலம், ஈகா பாயின்ட், ஈ.வே.ரா சாலை, ஹாரிங்டன் பாயின்ட் ஹி திருப்பம் வழியாக சென்று புனித ஜார்ஜ் பள்ளி அருகே முடிவுற்றது.
பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவும், சோப்பு அல்லது திரவ சுத்திகரிப்பான் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி, முன்கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) திருமதி.கே.பவானீஸ்வரி, இ.கா.ப., இணை ஆணையாளர் திருமதி.பி.கே.செந்தில்குமாரி, இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு), துணை ஆணையாளர்கள் டாக்டர்.தீபா சத்யன், இ.கா.ப, (போக்குவரத்து/தெற்கு) திரு.ரி.பாலகிருஷ்ணன், (போக்குவரத்து/கிழக்கு), மத்தியகுற்றப்பிரிவு துணை ஆணையாளர் திருமதி.மீனா, (பொறுப்பு மைலாப்பூர் காவல் மாவட்டம்) காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.