படித்தப் படிப்புக்கான வேலை இல்லை, உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை, திறமையும் அறிவும் வீணாகிக் கொண்டிருக்கிறது. வயதும் கடந்து கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே செய்ய வில்லை. இன்றைய இளைஞர்கள் நான்கு பேர் கூடினாலே இந்தப் பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கும். இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து பெரிதும் கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அது உண்மையும் கூட..
ஏன் தொழில் தொடங்க வேண்டும்?
மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட இந்த வாழ்க்கை முறை நம்முடைய எதிர்காலத்தை ஒரு நிலையற்ற தன்மைக்குள் வைத்திருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை நிரந்தரமில்லை. எனவேதான் இன்றைய தலைமுறையினர் அனைவரும் சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. ஆனால் இப்போது யாரைக் கேட்டாலும் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதுதான் பதிலாக இருக்கிறது.
தொழில் தொடங்கினால் சுதந்திரமாக செயல்பட முடியும். நம்முடைய திறமைகளைப் பிறரிடம் நிரூபித்து காட்ட வேண்டிய தேவை இல்லை. நாமே அவற்றை நடைமுறைப்படுத்தி முயற்சி செய்து பார்க்க முடியும். நம்முடைய தேவைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. நம்மை சுற்றி இருக்கும் உலகம் நம்மிடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. நம்முடைய தேவைகளையும், பிறரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நமக்கு பிசினஸ் என்பது மிகவும் கைக்கொடுக்கும்.
எல்லோராலும் பிசினஸ் செய்ய முடியுமா?
இன்றைய இளைஞர்களில் 35 சதவிகிதம் பேர் படித்து முடித்ததும் ஏதோ ஒரு வேலைக்குப் போய்விடுகின்றனர். 25 சதவிகிதம் பேருக்கும் படித்து முடித்த பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவர்கள் படிக்கும் போது நாம் ஏன் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. பின்னால் மிகவும் கஷ்டப்படுகின்றனர் மற்றும் பிற 25 சதவிகிதத்தினர் குடும்ப தொழில்களைப் பார்த்து கொள்கின்றனர். 5 சதவிகிதம் பேர் மட்டுமே படித்து முடித்ததும் சொந்தமாகத் தொழில் செய்யலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதில் வேலை பார்க்கும் 35 சதவிகித இளைர்கள் தங்களின் 30 வயதைக் கடக்கும் போதுதான் அவர்களுக்குள்ளும் நாம் ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கூடாது என்ற எண்ணம் உண்டாகிறது. அவர்களிலும் சிலர்தான் தாங்கள் வேலைப் பார்த்த அனுபவத்தை வைத்தும், தங்களின் சுய ஆர்வத்தை வைத்தும் தொழில் தொடங்க முன்வருகிறார்கள்.
பலர் வேலையை விட்டுவிட்டு ஒரு வேளை தொழில் தொடங்காவிட்டால் வருகிற சம்பளமும் போய்விடுமே, தொழிலில் நஷ்டமடைந்துவிட்டால் என்ன செய்வது, தொழில் தொடங்க பணம் இல்லையே என்று அதே வேலையில் இருந்து விடுகிறார்கள். உண்மையைச் சொன்னால், பிசினஸ் தொடங்க பணம் அவசியம்தான். ஆனால் அதைக்கூட எளிதில் தயார் செய்துவிடலாம். தொழில் செய்யப்போகும் நபர், தன்னை தயார் செய்து கொள்வதில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு இடத்தில் வேலை பார்ப்பதும், பிசினஸ் செய்வதும் முற்றிலும் வேறானது.
தொழில் செய்யும் போது நமக்கு இருக்கும் சுதந்திரமே, நமக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு தொழில்முனைவோருக்கு மிகவும் முக்கியமானவை சில குணங்கள். அவை இருந்தால் தான் தொழில் செய்ய ஒருவர் முடிவெடுக்க வேண்டும். பொறுமை, நேரம் தவறாமை, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், தொழில் குறித்த போதுமான அறிவு, மூலதனத்தைத் திட்டமிடும் திறன், நிர்வாகத் திறன், மேலாண்மை செய்யும் திறன், வெற்றி, தோல்விகளால் சலனப்படாத மனம் ஆகியவை இருந்தால் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.
பிசி மேன் தான், பிசினஸ் மேன்!
பிசினஸ் தொடங்க முடிவு செய்த பின், என்ன பிசினஸ் செய்யப் போகிறோம், எப்படி செய்யப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். திட்டமிட்டபடி அதனை நடைமுறைப்படுத்த என்னவெல்லாம் வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். பிசினஸ் என்பது பெட்டிக்கடை ஆரம்பிப்பது போல் என்று நினைத்தால் தொழில் செய்யவே நினைக்காதீர்கள். பிசினஸ் என்பது பெரிய விஷயம். அதனை முறைப்படி செய்தாக வேண்டும். பிசினஸூக்கு பெயர் வைப்பதிலிருந்து, அரசிடம் பதிவு செய்வது முறையாக வரி கட்டி, படிப்படியாக வளர்ச்சியை அடைந்து முன்னணி பிசினஸ் மேனாக உயர்வதுதான் பிசினஸ். மற்றவையெல்லாம் பிசினஸ் அல்ல என்பதை முதலில் உணருங்கள். அந்த உணர்வு பிசினஸ் மேன்களுக்கு மிகவும் முக்கியம். பிசினஸ் செய்தால் தேவையான போதெல்லாம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். தாமதமாக செல்லலாம் என்பதை எல்லாம் மறந்து விடுங்கள். எப்போதும் தங்களை பிசியாக வைத்திருப்பவர்கள் தான் பிசினஸ்மேன்கள்.
பிசினஸ் எப்படி செய்வது?
பிசினஸ் செய்ய மனதளவில் தயாராகிவிட்டீர்கள் என்றால் வெற்றிகரமாக நீங்கள் முதல்படியைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதற்கு அடுத்து, என்ன தொழில் செய்வது? தொழில் தொடங்க என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப் பட வேண்டும்? பிசினஸூக்கு தேவையான முதலீடு, மனிதவளம், ஆக்கபூர்வ சிந்தனைகள் மூன்றையும் எப்படி ஒரு தொழில்முனைவோர் வெற்றிகரமாக அடைவது? எப்படி ஒரு தொழிலை நிர்வாகம் .
(தொடரும்…)