சென்னை எழும்பூரிலுள்ள காவலர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நலம் விசாரித்து, மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் “காவலர்கள், அவர்கள் குடும்பத்தினர் அமைச்சுப்பணியாளர்களுக்கு என 35 ஆக்சிஜன் படுக்கை வசதி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து சென்றுள்ளனர் 19 பேரில் காவல்துறையின் உறவினர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 19 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் அனைவரும் நலமுடன் உள்ளனர்.
சென்னை பள்ளிகளில் இருந்து வரும் பாலியல் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதற்கென துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் விசாரணையில் உள்ளது , போதிய ஆதாரம் உள்ளது தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி சி.டி.மணி மீது கொலை வழக்கு மற்றும் மற்றும் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார். போரூர் மேம்பாலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது தன்னிடமிருந்த கள்ளத்துப்பாக்கி கொண்டு இரண்டு ரவுண்டு காவல்துறை நோக்கி சுட்டதில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடிகளை பட்டியலிட்டு கட்டுபடுத்துவோம், அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது வருங்காலங்களில் அதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒரே நாளில் ரவுடிகளை தடுத்து நிறுத்த முடியாது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒரு லிஸ்ட் ரெடியாகி வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வியாசர்பாடியில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கில் உடனடியாக சமூக விரோதிகளை கைது செய்துள்ளோம்” என காவல் ஆணையர் தெரிவித்தார்.