தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் இரண்டு ரேசன்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் மதன்பட்டவூர், நவக்கொல்லைக்காடு உட்பட பகுதி நேர ரேசன்கடைகள் சில இயங்கி வருகின்றன. இங்கு பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவின் அடிப்படையில் தான் பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது. ஆனால் சில குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமலே வழங்கப்பட்டதாக அவர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது.
கடையில் சென்று விற்பனையாளரிடம் கேட்டால் நீங்கள் பொருள் வாங்கி விட்டீர்கள். அடுத்தமாதம் வாருங்கள் என சொல்கிறார்கள். அட்டைதாரரின் விரல் ரேகை இடப்படாமல் எப்படி இந்த பொருட்கள் வெளியில் செல்கிறது விற்பனையாளருக்கே வெளிச்சம்.
இதுகுறித்து இந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும் பொழுது இந்த ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் தங்களுக்கு உதவியாளர்கள் சிலரை வைத்துக் கொள்கிறார்கள். இந்த உதவியாளர்களை வைத்துக்கொள்ள அரசின் உத்தரவு உண்டா என்பது தெரியவில்லை? மேலும இந்த உதவியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் ரேசன் அட்டையை வைத்து பொருட்களை முதலில் பார்சல் செய்து வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து பொருட்களை அனுப்பி விடுகின்றனர்.
விவசாய கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ரேசன் கடையில் வரிசையில் நின்று பொழுதை கழிக்கின்றார்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் இருந்தே பொருட்களை பெறுகின்றனர். சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறை காரணம் காட்டி பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. பெரும்பாலான முறைகேடுகளுக்கு இந்த உதவியாளர்கள் காரணமாகின்றனர். இவர்களிடம் மக்கள் அவமானப்பட வேண்டியுள்ளது. ரேசன் அரிசி இலவசம் தான். ஆனால் அரிசி வாங்க வேண்டும் எனில், அங்கு விற்கப்படும் சோப்பு, உப்பு, சேமியா போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதுபோன்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதுவும் அரசு கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை விடவும், தனியார் நிறுவன தயாரிப்பு பொருட்களும் கட்டாயமாக விற்கப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்?