பிசினஸ்மேனாக ஆவதற்கு மனதளவில் தயாராவது மிகவும் அவசியம் என்று கூறியிருந்தேன். பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் மனதளவில் தயாராகி விட்டீர்கள் என்றே அர்த்தம். சரி அடுத்து என்ன? பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு என்ன பிசினஸ் செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படும். “தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்“ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அனுபவமில்லாத முற்றிலும் புதிய தொழில்களில் இறங்கி பெரும் சாதனை படைத்தவர்கள் இருக்கிறார்கள்.
உங்களுக்காக காத்திருக்கும் சந்தை !
உங்கள் முன்னே விரிந்து கிடக்கும் சந்தை பிசினஸ்மேனாக விரும்பும் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளுடன் காத்திருக்கிறது. உங்கள் மனதைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். சந்தையைக் கூர்ந்து கவனியுங்கள். வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் உங்களுக்குத் தேவையானதை நீங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள். இப்போது சந்தையில் என்னென்ன தொழில்கள் உள்ளன. அவற்றில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் நம்முடைய சரியான தேர்வு பாதி வெற்றியை நமக்கு பெற்றுத் தந்துவிடும். சந்தையில் உற்பத்தி (Manufacturing), வர்த்தகம் (Trading) மற்றும் சேவை (Service) ஆகிய துறைகள் உள்ளன. பெரும்பாலும் அனைத்து பிசினஸ்களும் இந்தத் துறைகளுக்குள் அடங்கிவிடும். இயந்திரங்கள், உதிரி பாகங்கள், நுகர்வுப் பொருட்கள் போன்றவை உற்பத்தி துறையிலும், பேங்கிங் , ஓட்டல், சுற்றுலா, மருத்துவம், ஆடிட்டிங் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்றவை சேவை துறையிலும் அடங்குகின்றன. வர்த்தகத்தில் பொருட்களை ஒருவரிடம் இருந்து வாங்கி இன்னொருவரிடம் விற்கும் அனைத்தும் அடங்கும். அது நேரடி வர்த்தகமாகவும் இருக்கலாம். ஆன்லைன் வர்த்தகமாகவும் இருக்கலாம்.
உற்பத்தித் துறை
உற்பத்தித் துறையில் மிகப்பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏனெனில் பெரும்பாலான பொருட்களை நாம் இறக்குமதி தான் செய்து கொண்டிருக்கிறோம். 130 கோடி மக்கள் தொகைக் கொண்ட ஒரு நாடு இறக்குமதி நாடாக இருப்பது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவு தடுக்கிறது. உற்பத்தித் துறையில் பிசினஸ் செய்ய விரும்பினால், விவசாயமோ, இயந்திரமோ எந்தப் பொருளை உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ அந்தப் பொருள், உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் உபகரணங்களைக் கையாளும் அறிவு ஆகியவை அவசியம். அல்லது இவை குறித்த அறிவு கொண்ட நபர்களை வேலைக்கு வைக்கும் அளவுக்கு கையில் மூலதனம் இருக்க வேண்டும். சரி பொருளை உற்பத்தி செய்துவிட்டீர்கள். உற்பத்தி செய்த பொருளைத் தேடி வந்து வாங்குவார்கள் என்று காத்திருந்தால் காலம் முழுக்க காத்திருக்க வேண்டியதுதான். “நீங்கள் யாருக்காக அந்தப் பொருளை உற்பத்தி செய்தீர்களோ அவர்களைத் தேடி நீங்கள் தான் போகவேண்டும். வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதும், வாடிக்கையாளர்களை வென்று எடுப்பதும் ஒரு கலை” அதைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். விவசாயம் தனித்துறையாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அதனையும் உற்பத்தித் துறையாகவே எடுத்துக் கொள்ளலாம். விவசாயம் தற்போது பிசினஸாக, உருவெடுக்கத் துவங்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட துவங்கியுள்ளன. இயற்கை விவசாயம் என்று சொல்லப்படும் ஆர்கானிக் விவசாயத்திற்கு மக்களிடையே மவுசு அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான படித்த இளைஞர்கள் விவசாயத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வர்த்தகம்
பிசினஸ் செய்ய விரும்பும் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது வர்த்தகம் தான். ஏனெனில் இதில் உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை வாங்கி வாடிக்கையாளரிடம் விற்பதுதான் வேலை. இது பலருக்கு எளிதாகவும் அதிக லாபம் தருவதாகவும் இருப்பதால் வர்த்தகம் அதாவது டிரேடிங் செய்வதில் தான் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு பணமும் வாடிக்கையாளர்களைப் பிடிக்க தேவையான முயற்சியும் இருந்தால் போதுமானது. தற்போது ஆன்லைன் வர்த்தகம் பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் வாய்ப்புகள் உள்ளன.
சேவைத்துறை
தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீன யுகமும் சேவைத்துறையில் மிக விரைவாக பணம் சம்பாதிக்க தேவையான வழிகளைத் தனக்குள் வைத்திருக்கின்றன. பொருளை உற்பத்தி செய்பவருக்கும், பொருளை வாங்குபவருக்கும் இடையில் பாலமாக இருப்பதுதான் சேவைத்துறை. சேவைத்துறையில் பல வகை பிசினஸ்கள் உள்ளன. தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாடும், இணைய பயன்பாடும் அதிகரித்துவிட்டதால் சேவைத்துறையில் பிசினஸ் செய்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதில் நீங்களும் ஒருவராக ஆக விரும்பினால் ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் ஆப் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், மக்களின் மனநிலை குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். மக்களின் தேவையும், மனநிலையும் மாறுவதற்கேற்ப நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இவை குறித்து சரியான பார்வை இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.
நீங்களும் உங்களது முன்னோடிகளும்
மேற்கண்ட துறைகளில் கொடிகட்டிப் பறந்த முன்னோடிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாமே அடிபட்டு அடிபட்டு கற்றுக்கொள்ள சில வருடங்கள் ஆகிறது என்றால், ஏற்கெனவே அடிபட்டு அனுபவப்பட்டு வெற்றியடைந்த முன்னோடிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் சில மாதங்களில் பிசினஸ் செய்வது குறித்து ஒரு தெளிவுக்கு வந்துவிடலாம். சாதனை படைத்தவர்கள் மட்டுமல்ல முன்பின் தெரியாதவர்கள் கூட நமக்கு சில விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார்கள். அதனால் எப்போதும் நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு மாணவனாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
உற்பத்தித் துறையோ, வர்த்தகமோ, சேவைத்துறையோ எந்தத் துறை உங்களுக்குச் சரியாக இருக்கும், எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி முடிவு செய்வதற்கு முன் நீங்கள் உங்களைப் பற்றி முதலில் முழுதாகத் தெரிந்திருப்பது அவசியம். பிறரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பது கூட இல்லை. எதிலும் வெற்றியை சாத்தியமாக்க வேண்டுமெனில் நம்மை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை எப்படி தெரிந்து கொள்வது? நம்முடைய பலம் என்ன? பலவீனம் என்ன? நம்முடைய திறமை என்ன? எப்படி அவற்றை நம்முடைய பிசினஸ்க்கு பயன்படுததுவது? ஆகியவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
(தொடரும்…)