தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன. அதற்கு முன்னதாகவே, அதாவது மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என ஊரடங்கு தளர்வுகளில் அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டுவிட்டன. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், எங்கே இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், எவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறதோ, அவ்வளவையும் கட்டிவிடுகின்றனர். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் பெற்றோர்கள்தான் ஓரளவு புகார்களை வெளியில் சொல்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலம் 2020 மார்ச்சில் தொடங்கியபோது மூடப்பட்ட பள்ளிகள், இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்தாண்டே கட்டண வசூல் குறித்து புகார்கள் எழுந்தபோது, கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்ககூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது பள்ளிக் கல்வித் துறை. இதனை எதிர்த்து, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது எப்படி? பள்ளியை நடத்துவது எப்படி போன்ற கேள்விகளோடு நீதிமன்றத்திற்கு சென்றனர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர். கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தில் 75 சதவீதத்தை 25% என 3 தவணைகளாக வசூலிக்கக் கோரியது தமிழக அரசு. 50% கட்டணம்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்றது பெற்றோர் மாணவர் சங்கம். நீதிமன்றமோ 40 சதவீதத்தை முதலிலும், பள்ளி திறந்த பின்னர் 35 சதவீதத்தையும் வசூலிக்க அனுமதித்தது. இந்த உத்தரவை பல பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார்கள் எழத்தான் செய்தன.
கடந்தாண்டு சிக்கல் முடிவடைவதற்குள் அடுத்த கல்வியாண்டும் கொரோனா இரண்டாவது அலைக்கு இடையில் பிறந்தது. பள்ளிகள் திறப்பு குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு பெருந்தொற்று ஆட்டிப்படைத்த நிலையிலும், கட்டண வசூலுக்கான குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் பெற்றோர்களின் கைபேசிகளை நிறைத்துக் கொண்டிருந்தன. ஓரளவு தொற்று குறையத் தொடங்கியதும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நீதிமன்ற உத்தரவைத்தான் இந்தாண்டும் பின்பற்ற வேண்டும் எனக் கூறினார். அதற்கு முன்னதாகவே 100%-த்திற்கும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகவும், முந்தைய ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பல பெற்றோர்கள் புகார்களை முன்வைத்தனர். விளைவாக பள்ளிக் கல்வித் துறை தரப்பிலிருந்து சில சுற்றறிக்கைகள் மட்டுமே வெளியாகின. அதிலும் 75% கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும் என பொதுவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எத்தனை தவணைகள் எனக் கூறப்படவில்லை.
75% என்றால், 100% என்ன தொகை என்றே தெரியாதபோது தான் கட்டுவது 75% தான் என்பது தங்களுக்கு எப்படித் தெரியும் என பல பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு பள்ளிக்கும் 2021-22ஆம் கல்வியாண்டிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதா? முந்தைய ஆண்டின் கட்டணம் என்றாலும், அதனை பெற்றோர்கள் எப்படி அறிவது? பள்ளிகள் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டும் என்பது அரசின் வலியுறுத்தலாக இருந்தாலும், அதனை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா? அது பள்ளிக் கல்வித் துறையால் கண்காணிக்கப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை. பதில் கிடைக்காதது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் கிடைப்பதில்லைதான்.
பெற்றோர்களின் புகார்கள் விசாரிக்கப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். அங்கீகார ரத்து செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையோடு அந்த நடவடிக்கை நின்றுவிடக் கூடாது. கட்டண நிர்ணயம் என்பதும் தனியார் பள்ளிகளின் தரப்பு மட்டுமின்றி பெற்றோர்களின் கருத்துக்களுக்கு பிறகு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.