ஏற்கெனவே பெண் அதிகாரிகள் பலரையும் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தற்போது கூடுதல் நியமனங்களால் மகளிர் கோட்டையாக மாறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியராக இருந்த பி. உமாமகேஸ்வரிக்கு பதிலாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்த- நடனக் கலைஞர் கவிதா ராமு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்த, லோக. பாலாஜி சரவணன் சென்னை தலைமையிடத்து துணை ஆணையராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியராக அபிநயா, புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளராக லில்லி கிரேஸ் ஆகியோரும் சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்தப் பதவிகளில் இதற்கு முன்பு ஆண் அதிகாரிகள்தான் பொறுப்பில் இருந்தனர்.
ஏற்கெனவே, பல்வேறு பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாக ஆர். சத்யா, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் நிலமெடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக ரம்யாதேவி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பி. கீதா, ஜெரீனா பேகம், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக டாக்டர் மு.பூவதி, மாவட்ட சிறைத் துறை கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த. விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலராக ரேணுகா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுபிரியா, மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளராக எம். உமாமகேஸ்வரி, டாஸ்மாக் மாவட்ட மேலாளராக வசுந்தரா தேவி, புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநராக டாக்டர் பா.கலைவாணி, மாவட்டத் தொழில் மைய மேலாளராக திரிபுரசுந்தரி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜெ. ரேவதி, முன்னாள் படைவீரர்கள் நலத் துறை உதவி இயக்குநராக டி.கே. செண்பகவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக டாக்டர் எஸ். உம்மல் கதீஜா, நபார்டு வங்கியின் வளர்ச்சி மேலாளர் எஸ். ஜெயஸ்ரீ போன்ற பெண் அலுவலர்கள் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் படித்து மருத்துவரான முதல் பெண் மருத்துவர்- சமூக சீர்திருத்த வாதியுமான டாக்டர் முத்துலட்சுமி, பிறந்த மாவட்டமான புதுக்கோட்டை இப்போது, ஏறத்தாழ முழுமையான மகளிர் கோட்டையாக மாறியிருக்கிறது.