டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைபோல தமிழகத்திலும் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது யாருக்கு லாபம்? தமிழகத்தில் இத்திட்டம் சாத்தியமா?
வீடு, நிறுவனங்கள், ஆலைகள் என தமிழகத்தில் தற்போது டிஜிட்டல் மீட்டர்களை பொருத்தி மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. வழக்கமாக மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து ரீடிங் எடுத்து செல்வர். இதன்பின் நமக்கான மின் கட்டணம் தெரிய வரும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மின்வாரிய ஊழியர்கள் வந்து ரீடிங் எடுக்க முடியாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானதை நாம் கண்டோம்.
இதுவே நமது வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தால் எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது. தற்போதுள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தி அதனை சர்வருடன் இணைத்துவிட்டால் போதும். மாத இறுதியில், நாம் எவ்வளவு யூனிட் பயன்படுத்தியிருக்கிறோம், மின் கட்டணம் எவ்வளவு என்ற விவரம் நமக்கு எஸ்எம்எஸ்-ஆகவோ, ஈமெயிலாகவோ வந்துவிடும். அது தவிர ப்ரீபெய்டு என்ற வசதியும் இதில் உண்டு. செல்போன் எண்ணுக்கு எப்படி ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்கிறோமோ அதே நடைமுறை தான் இதிலும் பின்பற்றப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதன் மூலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு லாபம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் மின்சார பயன்பாடு என்பது மிக துல்லியமாக கணக்கிடப்படும் என்பதால் மின்பகிர்மான கழகத்துக்கு லாபம் கிடைக்கும் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பீகார் மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் மின் பகிர்மான கழகத்தின் வருவாய் 21 விழுக்காடு கூடி, 264 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் 2018ஆம் ஆண்டிலேயே ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த EESL நிறுவனத்துடன் மின் பகிர்மான கழகம் ஒப்பந்தம் போட முயற்சி எடுத்தது. ஆனால் அரசு அதனை அனுமதிக்கவில்லை.
தற்போது EESL உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பீகார் மாநிலங்களில் ஒன்றரை கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இந்நிறுவனத்திடம் ஸ்மார்ட் மீட்டர்களுக்காக ஒப்பந்தம் போட்டுள்ளன. எனவே தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மீண்டும் இத்திட்டத்தை கையில் எடுத்தால் மின் பயன்பாடு கணக்கீட்டை எளிதாக்குவதோடு மின் பகிர்மான கழகத்துக்கும் கூடுதல் வருவாயை அளிக்கும் என நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.