ஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த அரசியல்கட்சி பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணதங்குடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் நாதன் செல்வராஜ். இவர் அரசியல் கட்சியில் பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலம் அருகே உள்ள மூரியன் குட்டை எனப்படும் குளத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
அங்கு மீன் குட்டை அமைப்பதற்காக ஜேசிபி மற்றும் டிராக்டர் உதவியுடன் மீன் குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில், நேரில் சென்று அரசு இடத்தில் மணல் எடுக்க உரிய அனுமதி பெற்றுள்ளீர்களா எனக் கேட்டுள்ளார். அப்போது நாதன் செல்வராஜ், “இடம் என்னுடையது. நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. டி.எஸ்.பி சுனில், தாசில்தார் சீமானுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் சீமான், வி.ஏ.ஓ சுபாஷினி, சர்வேயர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட இடத்தை அளந்து பார்த்தனர். இதில் நாதன் செல்வராஜ் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்தது உறுதியானது.
இதையடுத்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த செல்வராஜ், டிராக்டர் உரிமையாளர் கண்ணதங்குடி கீழையூரை சேர்ந்த ராஜாங்கம்(54), கண்ணதங்குடி கீழையூர் ஆண்டி நத்தம்காடு சேர்ந்த டிராக்டர் டிரைவர் பிரபு (36), பூவாத்தூர் மேலத்தெருவை சேர்ந்த ஜேசிபி டிரைவர் ராமசந்திரன் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கண்ணுக்குடி மேற்கு பகுதியை சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் அப்பாத்துரை(56) போலீசார் தேடி வருகின்றனர்.