“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் முதல் வெற்றி. ஆனாலும் 69% இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
“மத்திய அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆன பிறகும் முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளது. சமூக நீதி வரலாற்றில் முக்கிய நகர்வாக உள்ளது.
மாநிலங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு வழங்கும் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் 15% மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளங்கலை இடங்களிலும், 50% முதுநிலை மருத்துவ இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக திமுகவின் சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் தொடர்ந்து வலியுறுத்தியும் – போராடியும் வந்த திமுகவின் தலைமையில் இந்த முறை ஆட்சி அமைந்தவுடன் முதன்முதலில் பிரதமரை நான் நேரில் சந்தித்தபோதும் இக்கோரிக்கையை வலியுறுத்தினேன்.
திமுக தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2020 அன்று அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
ஏற்கெனவே பல ஆண்டுகளாக இந்த இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு பின்பற்றாத காரணத்தால் ஏறக்குறைய 10 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை அகில இந்திய அளவில் இழந்தார்கள். அதில் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
இப்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த இட ஒதுக்கீட்டின்படி நாடு முழுவதும் 1500 எம்.பி.பி.எஸ் இடங்களும், 2500 பேருக்கு முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும் என்று அறிவித்துள்ள நிலையில், 2021-&22ஆம் கல்வியாண்டில் இருந்து ஆக மொத்தம் 4000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப் போவதை திமுகவின் சட்ட ரீதியான சமூக நீதிப் போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்திருக்கிறது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது அழுத்தமான உறுதியான கோரிக்கையாகும்.
அத்தகைய முழுமையான சமூக நீதியை அடையும் வரை திமுகவின் தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை திமுகவும், இந்த அரசும் தொடர்ந்து நடத்தும். சமூக நீதியே மக்கள் நீதியாகும்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.