தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமான் புஞ்சை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயான கொட்டகை திடீரென இடிக்கப்பட்டு, மயானத்தின் ஓரங்களில் அடைப்பாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
ஊமச்சிபுஞ்சையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டு டிராக்டர் மூலம் அந்த சாலைக்கு மண் கொட்டப்படுகின்றது. நல்லமான்புஞ்சை மயானத்தில் இருந்த மயான கட்டிடம் இடித்து சாலையில் போடப்பட்டுள்ளது, புதிதாக அமைக்கும் சாலைக்கு இடையூறாக இருந்த மயான கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 10 அடி தள்ளி புதிய மயான கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
நல்லமான்புஞ்சை மற்றும் ஊமச்சிபுஞ்சை கிராமத்துவாசிகள் சிலர் நம்மை தொடர்பு கொண்டதை அடுத்து நாம் விசாரித்தபோது அந்த புதிய சாலை ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராசாக்கண்ணுக்கு சொந்தமான வயல்கள் மற்றும் தோப்புகளுக்கு அமைக்கப்படுவதாக தகவல் சொன்னார்கள்.
இதுவரை எந்த திட்டங்களையும் செய்யாத தலைவர் தனது வயல் மற்றும் தோப்புகளுக்கு ரோடு எடுக்கின்றார். ஒரு மயானத்தின் நான்கு புறமும் சுற்று சுவர் அமைத்து பாதுகாப்பாக இருப்பது தான் அரசு திட்டமும், சட்டமும். எதனால் எந்த விதி முறைகளையும் மதிக்காமல் சுடுகாட்டு கட்டிடத்தை இடித்து விட்டு, சுடுகாட்டின் நடுவில் தனது சொந்த பயன்பாட்டிற்காக, சட்ட விரோதமாக சாலை அமைக்கின்றார்.
சுமார் 300 முதல் 400 மீட்டர் வரை அந்த சாலை இருக்கும். சுடுகாட்டு கொட்டகையை இடித்து விதிமுறைக்கு மாறாக தனது சொந்த பயன்பாட்டிற்கு ரோடு அமைக்கும் ராஜாக்கண்ணு மீது நாம் பல குற்றச்சாட்டுக்களை நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் வாயிலாக பலமுறை பல தவறுகளை சுட்டிக்காட்டி வெளியிட்டு இருந்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை.
நவக்கொல்லைகாடு பிள்ளையார் குளம் தூர்வாரும் பணியில் பல லட்சம் ஊழல் என ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம். சம்பந்தப்பட்ட எந்த நிர்வாகமும் எந்த விசாரணையும் செய்ய வில்லை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒட்டங்காடு ஊராட்சியில் நடைபெறும் அங்கன்வாடி, மயானம், சுற்றுச்சுவர் என அனைத்து வேலைகளையும் ஊராட்சி மன்ற தலைவரே பார்க்கின்றார். ஊராட்சி சட்டப்படி ஊராட்சி மன்ற தலைவரே ஒப்பந்தகாரர் போல எல்லா வேலைகளையும் பார்க்கின்றார் அது சரியா? அவரே நேரடியாக பார்க்கலாமா என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் மயானத்தின் நடுவில் ரோடு அமைத்து தனது சொந்த தோப்பு வயல்களுக்கும் பாதை எடுக்கின்றார். தமிழகம் முழுவதும் சுடுகாடு-, இடுகாடு இவை அனைத்தும் நான்கு புறமும் சுற்றுச்சுவர் இருப்பதுதான் நடைமுறையில் உள்ளது. இந்த தலைவரே மயானத்தின் நடுவில் தனது சொந்த வயலுக்கு ரோடு போடுகின்றார். இந்த செயலை கிராமவாசிகள் கேட்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது அடாவடியாக செயல்படும் ராஜாக்கண்ணு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். கிராமத்தார்களின் எதிர்பார்ப்பும் இதுதான்.