கம்யூட்டர் என்கிற கலியுகத்தில் தான் மட்டும் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற மனப்பான்மையில் வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையானது பெருகிவிட்டது.
குறிப்பாய் வாசிப்பை நேசிக்கும் தலைமுறையாக இன்றைய தலைமுறை உருவாகவில்லை என்பது நடைமுறை உண்மையாகும். அதிலும் தமிழில் பிழையின்றி பேசவும் எழுதவும் தடுமாறும் தலைமுறையாக இன்றைய தலைமுறை உள்ளது.
மேலும் கொரோனா நோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் செயல்படவில்லை என்பதை நினைத்து பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனை உண்டாகிறது. அதனால் நாளைய தலைமுறையின் எதிர்கால நலனுக்காக என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு என்கிற தலைப்பில் தன்னம்பிக்கை தொடரை எழுதி தருமாறு நுண்ணறிவு புலனாய்வு மாதஇதழில் ஆசிரியர் வேண்டுகோள் வைத்தார்.
அறிவுரை, ஆலோசனை, அக்கறை, பிறர் நலன், நாட்டு நலன், பயனுள்ள தகவல், கருத்து என்றாலே நம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றேன்.
மேலும் ஏற்கனவே நான் முகநூலில் பல பயனுள்ள தகவலை பதிவு செய்து வருகின்றேன் அவையனைத்தும் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்கிற பாணியில் போய்க்கொண்டு இருக்கிறது அய்யா என்று நடைமுறையை கூறினேன்.
நீங்கள் நினைப்பது போல தெய்வப்புலவர் நமது திருவள்ளுவர் நினைத்து இருந்தால் நமக்கு திருக்குறள் கிடைத்திருக்குமா?
தாமஸ் ஆல்வா எடிசன் நினைத்திருந்தால் இரவை பகலாக்கும் மின்சார விளக்கான பல்பானது நமக்கு கிடைத்திருக்குமா என்றார்.
ஆசிரியர் அவர்களின் ஆக்கமும் ஊக்கமும் நோக்கமும் என்னை ஆழமாக சிந்திக்க தூண்டியது.
மேலும் இந்த வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு என்கிற இந்த தன்னம்பிக்கை தொடரை என்னை எழுத தூண்டியது சமூக மேன்மைக்காக பாடுபடும் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை இத்தருணத்தில் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
- சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
அறம் அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான வாழ்வியலை குறிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் நல்லவை தீயவை அடங்கிய இச்சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை விதிகளின் தொகுப்பே அறம் என்கிற அஸ்திவாரம் எனலாம்.
ஒரு மாளிகைக்கு மண்டபத்திற்கு, அரண்மனைக்கு, கோபுரத்திற்கு, கட்டிடத்திற்கு, வீட்டிற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஒவ்வொரு மனிதனுக்கும் அறம் சார்ந்த ஒழுக்க நெறிகளாகும்.
மேலும் ‘அறு’ என்கிற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல்லாகும், இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்கு மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே- முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு.
அறத்தை பற்றிய நன்கு உணர்ந்ததால்தான் நமது தமிழ் கிழவி ஔவையார் அறம் செய்ய விரும்பென்று தனது ஆத்திசூடியில் முதல் கருத்தாக முத்தான சத்தான இக்கருத்தை கூறியுள்ளார்.
நம்மை சமூக மேன்மைக்கு கைகோர்க்க வலியுறுத்தியுள்ளார். மேலும் நம் தமிழர்களின் வாழ்வியலின் மூன்று கோட்பாடுகளாக அமைந்தவை அறம், பொருள், இன்பம் என்பன. இவை மூன்றிலும் அறம் தலைமை உடையது.
அறம் என்னும் சொல்லுக்கு கடமை, தருமம், கற்பு, புண்ணியம், அறநூல், அறக்கடவுள், அறச்சாலை, தருமதேவதை, யமன், ஞானம், நோன்பு, நல்வினை எனப் பொருள் உண்டு.
சங்க நூல்களில் அறம் என்பதற்குச் சுருங்கக்கூறின், “நல்லவை செய்தலும் அல்லவை கடிதலும்’ என்கிறது.
தமிழர் தம் வாழ்வின் துறைதோறும் அறத்தை மையமாகக் கொண்டிருந்தனர். இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது.
வாழ்க்கையில் கடைப்பிடிக்கத்தக்க அறங்கள் பல உள்ளன. பற்பல நற்பண்புகளெல்லாம் அறத்தின் பன்முகங்களாகவே எண்ணப்பட்டிருக்கின்றன.
சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான தமிழிலக்கியங்கள் அறத்தின் மாட்சிமைகளை நன்கு விளக்குகின்றன.
தொட்டிற் பருவத்திலிருந்தே அறம் தொடங்கி விடுகிறது. “கொடையும் தயையும் பிறவிக்குணம்’ என்று ஔவையார் பிறப்பிலிருந்தே அறப்பண்புகள் மலர்வதைக் சுட்டிக் காட்டுகிறார்.
பண்புமிக்க செல்வர் வீட்டுக் குழந்தை, புலவர் ஒருவருக்குத் தன் கையில் இருந்த நடைவண்டியையே கொடைப் பொருளாகக் கொடுத்ததாம். உள்ளம் சிலிர்த்த அவர், “நடை கற்குமுன் கொடை கற்றாயே’ என்று பாடியுள்ளனர் என்பது தமிழ் இலக்கியங்கள் கூறும் வரலாறாகும்.
சமீப காலமாக நாட்டில் நடக்கும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்கை, கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள், குடும்ப தகராறு, சொத்து தகராறு, பெண் கொடுமைகள், பாலியல் குற்றங்கள், பொய், பித்தலாட்டம், ஆள்மாறாட்டம், நிலஅபகரிப்பு, பணமோசடி, லஞ்சம், வரதட்சணை, விவாகரத்து, கந்துவட்டி, பேராசை போன்ற அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டே போவதற்கு முக்கிய காரணம் என்னவென்று ஆராய்ந்தால் இன்றைய சமூகமானது அறம் சார்ந்து வாழாமல் கடிவாளம் இல்லாத குதிரை போல கட்டுப்பாடு இல்லாமல் போனதே மிக முக்கிய காரணமாக உள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், பெரியோர்கள் கடைபிடித்த கட்டிக்காத்த அறத்தை நாம் அவசியம் கடைபிடிப்போம்.எனவே அறம் என்கிற அஸ்திவாரத்தை பலமாக ஆழமாக அமைப்போம்.
அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு அறமென்ற பாதை அமைப்போம்.!
( தொடரும்… )