தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் கடுமையாக எதிரொலித்தது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தபட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ”தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் நகாய் நிறுவனம் தன்னுடைய வசூல் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலில் ஈடுபட்டு வருகிறது. 536 கோடி செலவு செய்த அந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டின்படி 1098 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது.
ஆனலும் தொடர்ந்து சுங்ககட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ”தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன” என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அமைச்சர் கூறியதாவது:- மாநகர, நகரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் தான் சுங்கச் சாவடி அமைக்க வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால் சென்னையை சுற்றி 5 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வசூல் செய்து வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை நிறுத்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய நேரில் சென்று ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
முறைப்படி தமிழ்நாட்டில் 16 சுங்க சாவடிகள் தான் இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்க சாவடிகள் உள்ளன. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள அந்த 32 சுங்கசாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சட்டசபை கூட்டுத்தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் ஏ.வ.வேலு பேசினார்.