மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி (90) மூதாட்டி தனது மகன்கள் தனது சொத்தை அபகரித்துக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டி விட்டதாகவும், தனக்கு சொந்தமான வீட்டை மீட்டுக்கொடுத்தால் அதை விற்பனை செய்து இறுதிகாலத்தை கழித்துக்கொள்வதாகவும், இல்லையெனில் தன்னைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார். மனுவை பெற்ற ஆட்சியர் கோட்டாட்சியர் ஜெ. பாலாஜியிடம் தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தர உத்தரவிட்டார்.
இதேபோல, மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு வடக்குத்தெருவில் 3 தலைமுறைகளாக தென்னங்கீற்று உற்பத்தி தொழில் செய்து வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாங்கள் வசித்துவரும் முகவரியில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளது. மேலும் வீட்டுவரி, புதைச் சாக்கடை வரி, மின்சார வரி உள்ளிட்ட அனைத்தையும் செலுத்திவரும் நிலையில், நகராட்சி அந்த இடத்தை குளத்துப் பகுதி என கூறி காலி செய்ய வலியுறுத்துவதாகவும், அதே இடத்தில் தொடர்ந்து வாழ வழி செய்து தருமாறும் மனு அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து மனு மீது குறித்த காலத்துக்குள் விரைவு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.