வீட்டுமனை கேட்டு, ‘வாட்ஸ் ஆப்’பில் மனு அனுப்பிய கல்லூரி மாணவருக்கு, வீடு கட்டிக் கொடுக்குமாறு தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, கீழப்பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ், 55; செல்வமணி, 45 தம்பதிக்கு இரண்டு மகள், இரண்டு மகன் உள்ளனர். கூலி தொழிலாளியான தனிஸ்லாஸ், சொந்த வீடு இல்லாததால், ஒக்கநாடு கீழையூரில், உறவினர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.
அரசு கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வரும், கடைசி மகன் சதீஷ்குமார், 18, இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு மனை கேட்டு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, ‘வாட்ஸ் ஆப்’பில் மனு அனுப்பினார்.அதில், ‘சொந்த வீடு இல்லாததால் வீட்டுமனை கொடுத்து, அதில் வீடு கட்டித்தர ஏற்பாடு செய்தால், போதும். இலவசமாக கேட்கல; இன்னைக்கு எனக்கு இதை செய்தால், நாளைக்கு நான் படித்து, எங்களை போன்ற ஒருவருக்காவது வீடு கட்டித் தருவேன்’ என, தெரிவித்திருந்தார்.உடனே சதீஷ்குமாரை நேரில் வரவழைத்து விசாரித்த கலெக்டர், அவருக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு, வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.
சதீஷ்குமார் கூறியதாவது : மூத்த சகோதரி கவிதா பி.ஏ.,வும், அண்ணன் சுரேஷ் ஐ.டி.ஐ.,யும் படித்து, வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர். குடும்ப வறுமை காரணமாக, மற்றொரு சகோதரி பாசமலர், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார்.சொந்தமாக வீடு இல்லாமல், சிரமப்பட்டோம். அதிகாரிகள் காட்டிய இரண்டு இடங்களில், ஒரு இடத்தை தேர்வு செய்தோம். அதில், வீடு கட்டிக் கொடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இனி, வீடு இல்லை என, என் பெற்றோர் அவமானப்பட மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.