விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும், இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேி அறிவித்தார்.
ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெந்த் வெளியிட்டு உள்ளார்.
அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பிழைகளை சரி செய்து நில உரிமையாளர்களின் குறைகளை உடனடியாக தீர்க்கவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஒவ்வொரு தாலுகாவிலும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் என வாரத்துக்கு 2 வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தவேண்டும். இதற்கான பட்டியலை மாவட்ட கலெக்டர்கள் தயாரிக்கவேண்டும். தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்களை வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்.
பொங்கல் பண்டிகைக்குள் அதாவது ஜனவரி 15-ந்தேதிக்குள் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படுவதை உறுதி செய்யவேண்டும். நிலத்தின் சர்வே எண், துணை கோட்ட எண்ணில் தவறான பதிவுகளை நீக்குதல், நீட்டிக்கப்பட்ட திருத்தம், பட்டாதாரரின் பெயர் திருத்தம், பட்டாதாரரின் தந்தை பெயர், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம், நில உரிமையாளரின் உறவுமுறை தொடர்பான திருத்தம், காலியாக உள்ள பத்திகளில் திருத்தம், பட்டாதாரின் பகுதி, பெயர் அருகே உள்ள பட்டாதாரின் பெயரில் இருப்பதை திருத்துதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிழைகள் திருத்தம் செய்யப்படும்.
சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும். மாவட்ட வருவாய் அதிகாரிகள், சிறப்பு முகாம்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடவேண்டும். சிறப்பு முகாம்களுக்கான உள்கட்டுமானம், பணியாளர்கள், கொரோனா நோய்தடுப்பு முறைகளுக்கான ஏற்பாடுகளை துணை கலெக்டர்கள் செய்யவேண்டும்.
கிராம நிர்வாக அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், விவசாய கூட்டுறவு சங்க கட்டிடங்கள், வருவாய் ஆய்வாளர்கள் குடியிருப்பு, கிராம பஞ்சாயத்து சேவை மைய கட்டிடம், சமுதாய நலக்கூடம், புயல் மீட்பு நடவடிக்கைகளுக்கான முகாம்கள் உள்ளிட்ட இடவசதி இருக்கும் இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தலாம். சிறிய அளவிலான திருத்தங்கள், இணையதளத்தில் குறிப்பிட்ட அனைத்து விண்ணப்பங்கள், பிற விண்ணப்பங்களுக்கு என தனித்தனியாக மேஜைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
நேரடியாக சென்று ஆய்வு செய்யப்படவேண்டிய விண்ணப்பங்களை தவிர்த்து, சிறிய அளவிலான திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. உடனே தீர்த்து வைக்கவேண்டும். சிறப்பு முகாம்களில், சமூக இடைவெளி, முககவசம் கண்டிப்பாக அணிதல், கிருமிநிசானி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகனை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தல்களை பிறப்பிக்கவேண்டும். சிறப்பு முகாம்கள் தொடர்பான பணிகளை மாநில அளவில் நில நிர்வாக கமிஷனர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர் ஆய்வு செய்வார்கள். சிறப்பு முகாம்கள் திட்டத்தை பொதுமக்கள், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாகவும், வெற்றிக்கரமானதாகவும் மாற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.