நபார்டு வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நிதி ஆண்டில் ரூ.6,343 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் நபார்டு வங்கி, வளம் சார்ந்த கடன் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. இதில் வளத்தின் அடிப்படையில் முன்னுரிமைத் துறைகளான விவசாயம், சிறு- குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீடு, கட்டமைப்புகளுக்கான பொது முதலீடுகள், சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய திட்டங்களுக்குக் கடன் அளவிடப்படுகிறது. நபார்டு வங்கியின் புதுக்கோட்டை மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்.
அப்போது, 2022-23 நிதி ஆண்டுக்கான வங்கிக் கடன் ரூ.6,343.51 கோடியாக அளவிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டைவிட 7.2 சதவீதம் அதிகம் என ஆட்சியர் தெரிவித்தார்.
இதில், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ரேவதி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ்.ஜெயஸ்ரீ, முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் சு.ரமேஷ், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் திருப்புரசுந்தரி ஆகியோர் கலந்துகொண்டனர்.