கோவையில் நொய்யலை சார்ந்துள்ள 25 குளங்களில், 23 குளங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நல குழும மேலாண் இயக்குநருமான தாரேஸ் அகமது, கண்காணிப்பு அலுவலரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியுமான வன்னிய பெருமாள் ஆகியோர் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை பார்வையிட்டு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் ஒருபகுதியாக, வாலாங்குளத்தில் அவர்களுடன் ஆய்வு செய்த பிறகு, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இருப்பினும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நொய்யலை சார்ந்துள்ள 25 குளங்களில், 23 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பேரூர் பெரிய குளம், நீலம்பூர் குளத்தில் 95 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. கோவையில் உள்ள குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறும் பாதையில் ஏதேனும் அடைப்பு உள்ளதா, உடைப்பு உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வாலாங் குளம் உபரி நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டது. சித்திரைச்சாவடி, ஆழியாறு, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்குவதை தவிர்க்க, மாநகராட்சி சார்பில் 17 இடங்களில் பம்ப் செட்டுகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.