திருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது.
திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனை வைத்து, அவர் பத்திரம் தயார் செய்து விற்று விட்டார். தற்போது அந்நிலத்தில், வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதயை மார்க்கெட் மதிப்பில், நிலம், 10 கோடி ரூபாய் மதிப்புடையது.
இக்கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கக்கூடாது. தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். கோவில் நிலத்தை கோவிலுக்கு தவிர வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்று, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ஹிந்து அறநிலைய துறை அலுவலர்கள் கூறுகையில், ‘இந்த நிலம், கடந்த 1912ல் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. 1968ல், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்குப் பட்டா வழங்கப்பட்டது. தற்போதை நிலத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.