புதுக்கோட்டை அரசின் வீடுகள் கட்டும் திட்டத்தில் சிறுபான்மையினர் பிரிவில் ஏழை, எளிய மக்கள் இணைந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 260 சதுர அடி அளவில் ரூ.2,40 லட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தொகை நீங்கலாக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.12 ஆயிரத்தில் ஒரு கழிப்பறையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 90 மனித சக்தி நாட்களுக்கு கூலியாக நாளொன்றுக்கு ரூ.273 வீதம் ரூ.24,570 ஆக மொத்தம் ரூ.36,570 இதர திட்டங்களின் கீழ் இணைப்புத் தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையின இத்திட்டங்களில் 15 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
2021-2022 ஆம் நிதியாண்டிற்கு வரப்பெற்றுள்ள 13,605 வீடுகளில் 1,051 வீடுகள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.