வில்லங்க விவரங்களை பொது மக்கள் பார்க்க வசதியாக, கடந்த 1950 முதல் 1974ம் ஆண்டு வரையிலான 2.22 கோடி ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடு, மனை விற்பனையின் போது அதை வாங்குவோர், அந்த சொத்து தொடர்பான முந்தைய விவரங்களை அறிய வில்லங்க சான்று பார்ப்பது வழக்கம். இதற்காக, கடந்த காலங்களில் பொதுமக்கள் வில்லங்க சான்று பார்க்க சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். இதற்காக, ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் பொதுமக்கள் வில்லங்க விவரம் கேட்டு வந்ததால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது.
இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், கடந்த 2014 முதல் இணையதளம் வாயிலாக வில்லங்க சான்று பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 1987ம் ஆண்டு வரை சொத்து விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன. இதனால், அந்த விவரங்களை பொதுமக்களால் இணையதளம் வாயிலாக பார்க்க முடிந்தது. இதை தொடர்ந்து 1.1.1975ம் ஆண்டு முதல் சொத்து குறித்த விவரங்களை அளித்தால் வில்லங்க விவரங்களை பெறும் வசதி கடந்த 2018 டிசம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1975ம் ஆண்டு வரையிலான வில்லங்கத்தை எளிதாக பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் வில்லங்க விவரங்களை இலவசமாக தெரிந்து கொள்வதுடன் பிரதியும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், 1975க்கு முன்னர் உள்ள விவரங்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இது தொடர்பாக வில்லங்க சான்று பெற சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருளிடம் பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று கடந்த 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது:
1.1.1950 முதல் 31.12.1974 வரையில் உள்ள ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 15,10,799 ஆவணங்களும், கடலூரில் 23,49,220 ஆவணங்களும், கோவையில் 17,58,802 ஆவணங்களும், மதுரையில் 41,02,469 ஆவணங்களும், சேலத்தில் 20,28,518 ஆவணங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 42,37,916 ஆணவங்களும், தஞ்சாவூர் மண்டலத்தில் 19,87,827 ஆவணங்களும், திருச்சி மண்டலத்தில் 23,18,159 ஆவணங்களும், வேலூர் மண்டலத்தில் 19,87,402 ஆணவங்கள் என மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 112 ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகிறது.
இந்த நிறுவனம் பதிவேற்றம் செய்யும் ஆவணங்களை 100 சதவீதம் சார்பதிவாளர்களும், 5 சதவீதம் மாவட்ட பதிவாளர்களும், 2 சதவீதம் டிஐஜிக்களும் சரிபார்க்க வேண்டும். இணையதளத்தில் இந்த ஆவணங்களை பெறுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.நடப்பு நிதியாண்டில் ரூ.11.50 கோடியும், 2022-&23ம் நிதியாண்டில் ரூ.11.50 கோடி செலவிடப்படுகிறது.