கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பான சம வாய்ப்பு கொள்கை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து பேசும் போது, ‘‘கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம், வீ ஆர் யுவர் வாய்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி, இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் தங்கள் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆட்சேர்ப்பை அதிகரிக்க வேண்டும். மேலும், சின்ன சின்ன நடைமுறை மாற்றங்களால், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரிய மாற்றத்தினை நிறுவனங்கள் உருவாக்க இயலும்,’’ என்றார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன் மூலம் அனைத்து நிறுவனங்களும் சம வாய்ப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 52 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆலோசனை மையத்தின் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.