தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் பலருக்கும் நிவாரணத் தொகை இன்னும் போய்ச் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எம்.காசிமாயன் அவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பதில் கிடைத்துள்ளது.
அவற்றில் எதற்கும் உரிய தகவல்கள் அளிக்கப்படவில்லை. தனி நபர் விவரங்கள் என்று கூறி மழுப்பலான பதிலையே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காவலர் குடும்பங்களை உரிய நிவாரணம் சென்றடையவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அதாவது, மார்ச் 24, 2020 முதல் தற்போது வரை தமிழக காவல்துறையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டிருந்தார். அதற்கு, இந்த விவரங்கள் அனைத்தும் 37 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் 7 மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்கள் தொடர்புடையது.
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட/ மாநகர காவல் அலுவலகங்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழக காவல்துறையில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் காவலர் 84 பேரின் விவரங்கள், 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்ட கடிதத்தின் நகல்கள் வழங்குமாறு கேட்கப்பட்டது. இந்த விவரங்கள் மூன்றாம் நபர் குறித்தது. அதனால் பதில் அளிக்க இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே அந்த 36 பேரின் முழுமையான விவரங்களை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, இவை மூன்றாம் நபர்கள் குறித்தது. தகவல் அளிக்க இயலவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 2001 முதல் தற்போது வரை DVAC மூலம் லஞ்சம் பெற்றதாக கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் லஞ்ச பணம் தொகை பற்றிய தகவலை வழங்குமாறு கேட்கப்பட்டது. அதற்கு, இந்த மனு பொது தகவல் அலுவலர்/ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கம், 293, விரிழி சாலை, ஆலந்தூர், சென்னை -16க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் மற்றும் டிபிஎஸ் அதிகாரிகள் வீட்டில் ஆர்டலிகளாக உள்ள மொத்த காவலர்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான தகவலை தருமாறு கேட்கப்பட்டது. இவை மூன்றாம் நபர் குறித்தவை என்பதால் தகவல் அளிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எம்.காசிமாயனை தொடர்பு கொண்டு பேசுகையில், கொரோனாவால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் போய் சேர்ந்து விட்டதா என்று அறியும் நோக்கில் தான் RTI போடப்பட்டது. ஆனால் அரசு தரப்பு எதற்கும் சரியான பதில் தரவில்லை.
இது நிவாரணம் அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த விஷயத்தில் அரசு வெளிப்படைத்தன்மை உடன் இல்லை என்றே தெரியவருகிறது. எடப்பாடி ஆட்சியில் தான் போராடி நிவாரணம் பெற்று தர வேண்டிய சூழல் இருந்தால், ஸ்டாலின் ஆட்சியிலும் அதேநிலை நீடிக்கிறதே என்று அதிர்ச்சி தெரிவித்தார். காவல்துறை குடும்பங்களுக்கே உரிய நிவாரணம் போய் சேரவில்லை எனில், சாமானியர்களுக்கு குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.50,000 நிவாரணம் எப்படி போய் சேரும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் காவல் உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டலி முறை இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் RTI மூலம் கேள்வி எழுப்பினால் பதில் தராமல் ஏமாற்றுகின்றனர். அப்படியெனில் இன்னும் ஆர்டலி முறை தொடர்வதையே காட்டுகிறது. எனவே தமிழக அரசு உண்மை நிலையை ஆதாரங்களுடன் விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் குடும்பங்களுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.