சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வங்கியை நாடியுள்ளது.
ஆனால் வங்கி தரப்போ உரிய நடைமுறையைப் பின்பற்றி ஒடிபி எண்ணைக் கொடுத்துதான் பணம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. உடனே மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகாரளித்த நிலையில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணையைக் கையிலெடுத்தனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு ‘சிம் ஸ்வாப்’ முறையில் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ‘சிம் ஸ்வாப்’ அதாவது வங்கி கணக்கு வைத்திருக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்தின் வங்கி கணக்கின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து அதன்மூலம் இந்த கொள்ளை அரங்கேற்றப்படுகிறது. ஃபோன் கால் மூலமோ அல்லது குறுஞ்செய்தி மூலமோ வங்கி கணக்கின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது.
வங்கிகளில் பணியாற்றும் சில ஆசை பேர்வழிகள் ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களைப் பிறருக்கு விற்க வாய்ப்புள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படி தனிப்பட்ட நபர் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்கின் தனிப்பட்ட தகவலை விற்பதற்காக ஒரு கள்ளச் சந்தையே இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்படி தனிப்பட்ட தகவலைப் பெறும் கும்பல் முதல் வேலையாக கையிலெடுப்பது செல்ஃபோன் எண்ணைதான். எல்லா பரிவர்தனைகளுக்கும் ஒடிபியே கதி என்று ஆகிவிட்ட நிலையில் ஓடிபியை எப்படிச் சந்தேகம் இல்லாமல் எடுப்பது என்பதுதான் இந்த ‘சிம் ஸ்வாப்’ திருட்டு. முதலில் வங்கி கணக்குடன் தொடர்புடைய செல்ஃபோன் எண்ணை பெறும் திருட்டு கும்பல், தன்னுடைய செல்ஃபோன் எண் தொலைந்துவிட்டதாகச் சம்பந்தப்பட்ட செல்ஃபோன் நிறுவனத்திடம் பேசி அந்த எண்ணை முடக்குவார்கள். அதன்பிறகு பெறப்பட்ட மற்ற தனிப்பட்ட தகவல்களை வைத்து போலி ஆவணங்களைப் பெற்று மீண்டும் அதே எண்ணில் செல்ஃபோன் எண்ணை பெறுவார்கள். இதனால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைக்கான ஒடிபி நேரடியாக திருட்டு கும்பலின் கைகளுக்குப் போய் சேர்ந்துவிடும். இதன்மூலம் கணக்கில் உள்ள பணத்தை சில மணிநேரத்தில் எடுத்துவிடுவார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் புகார் செய்த அந்த தனியார் கண் மருத்துவமனையின் கணக்கிலிருந்து மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்கம் சென்ற சென்னை சைபர் க்ரைம் போலீசார் மேற்கு வங்க போலீசாரின் உதவியுடன் அந்த ஏடிஎம்-ஐ கண்டுபிடித்தனர். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருவரைக் கைது செய்து விசாரித்ததில் ‘சிம் ஸ்வாப்’ எனும் புதுவகை கொள்ளையைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்த சயந்தன் முகர்ஜி, ராகுல்ராய், ராபன் அலிஷானா, ராகேஷ்குமார் சிங் என நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களைச் சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.