தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராமம் இங்கு ஒட்டங்காடு உக்கடை ஒட்டங்காடு என இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டங்காடு, மதன்பட்டவூர், சின்ன தெற்குகாடு ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த நத்தம் (மனை) அடங்கல், சிட்டா, அ.பதிவேடுகள் சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் உள்ளதாக வருவாய்த்துறையினர் கூறுகின்றனர்.
சிட்டா, அடங்கல் கேட்டு வரும் பொதுமக்களிடம் எங்களிடம் ஆவணங்கள் இல்லை என கிராம நிர்வாக அலுவலர் கூறுகின்றனர். இது சம்பந்தமாக தாசில்தார், சார்ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் புகார் கூறியபொழுது, 2021ல் சார்ஆட்சியராக இருந்த திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் விசாரணை நடத்தினார். அப்பொழுது ஒட்டங்காடு கிராம உதவியாளர் 40 வருடங்களாக மேற்கண்ட ஆவணங்கள் இல்லை என கூறியுள்ளார். இவர் எப்போது பணிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. அந்த விசாரணையின் முடிவு என்ன என்பதும் தெரியவில்லை.
மேற்கண்ட மூன்று கிராமங்களிலும் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கும் வங்கி கடன் பெறுவதற்கும் மற்றும் மின்இணைப்பு பெறுவதற்கும் மேற்கண்ட ஆவணங்கள் மிக முக்கியம். ஆனால் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் ஆவணங்கள் காணாமல் போய் உள்ள மதன்பட்டவூர், நடுமனைகாடு மற்றும் சின்ன தெற்குகாடு ஆகிய கிராமங்களுக்கு நத்தம் (மனை) சம்பந்தமாக எந்த சான்றும் கொடுக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தற்போது உள்ள கிராம நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.
வருவாய் துறையின் ஆவணங்கள் காணாமல் போய் உள்ளது. இதற்கு முழு பொறுப்பும் வருவாய் துறையினர் தான். ஆனால் சான்று கேட்டு வரும் பொதுமக்களுக்கு உங்கள் மனை சம்பந்தமான ஆவணங்கள் இல்லை என வருவாய் துறையினர் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இந்தப் பிரச்சனையின் தீவிரம் இவர்களுக்கு புரிகிறதா இல்லை? இவர்களின் அலட்சியத்துக்கு பொதுமக்கள் ஏன் பலிகடா ஆகவேண்டும்.
2020ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபொழுது, நீங்கள் கேட்கும் ஆவணங்கள் இங்கு பராமரிக்கப்படவில்லை என பதில் வருகிறது. சிட்டிசன் திரைப்படம் போல் இப்பொழுது கிராம கணக்குகள் இல்லை என கூறும் வருவாய்துறையினர் இன்னும் சில வருடங்களில் ஒட்டங்காடு கிராமத்தை காணவில்லை என கூறபோகின்றனரா? என்பது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் இந்த அலுவலகத்தில் நடைபெற்ற சில முறைகேடுகள் சம்பந்தமாக 2020 மார்ச் மாதத்தில் அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது சம்பந்தமாக இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ளவில்லை.
மேலும், சிட்டா, அடங்கல் புத்தகங்கள் காணாமல் போய் உள்ள நிலையில் செல்வாக்கு உள்ள ஒரு சிலருக்கு மட்டும் 2019 வரை கிராம நிர்வாக அலுவலக சிட்டா நகலின்படி தூய சிட்டா (மனைவரி பட்டா) பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கி உள்ளனர். ஆவணங்கள் தொலைந்துவிட்டன என்று கூறிவரும் நிலையில் இது மட்டும் எப்படி சாத்தியமானது என தெரியவில்லை. தற்போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் நிலைமை பொதுமக்களை போராட்ட மனநிலைக்கு தள்ளியுள்ளனர். எனவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அவர்கள் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?