அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்’ எனக்கூறி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சீதாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான்.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் பிரிவினையை எதிர்த்துப் போரிட முடியும். சமூகத்தின் பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் பின்தங்கியவர்களுக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும்.
இந்த குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.