பட்டுக்கோட்டை நகராட்சி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சிக்கு இணையான ஒரு முக்கிய நகராட்சியாகும். வணிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்ற பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் போது தமிழகத்தின் தலைசிறந்த நகராட்சி என அறிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.
பெருமை வாய்ந்த இந்த நகராட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவது திமுகவா அதிமுகவா என போட்டி ஒருபுறம் இருந்தாலும் அதையும் தாண்டி ஏதாவது ஒரு மாறுதல் நடக்குமா என்றால் நடக்குமென ஆணித்தரமாகக் கூறும் நிலை உள்ளது.
பட்டுக்கோட்டை திமுகவின் கோட்டை என அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வரும் நிலையில் தொடர்ந்து திமுகவில் நிலவிவரும் உட்கட்சி பூசலால் கடந்த முறை பட்டுக்கோட்டை நகராட்சி அதிமுகவுக்கு கைமாறியது. அப்போது அதிமுக வேட்பாளர் ஜவஹர் பாபு பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை தோல்வியுறச்செய்தார்.
திமுகவில் செல்வாக்கும் நல்ல செயல்பாடுமுடைய அப்போதைய நகரச் செயலாளருமான சீனி அண்ணாதுரை பட்டுக்கோட்டையில் நிலவிவரும் உட்கட்சி பூசலால் கடந்த முறை தோல்வியுற்றார் .
தற்போதும் திமுக வில் உட்பூசலானது தொடர்ந்து வருகிறது என்பதற்கு உதாரணம் மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் கட்சித் தலைமையால் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு தற்பொழுது அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடிய வகையில் கட்சிப் பணி ஆற்றி வருகிறார் என அடிமட்ட தொண்டர்கள் கூறிவரும் வேளையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை அதிகாரம் அனைத்தும் எனக்குத்தான் என அவரது ஆதரவாளர்களிடம் கூறிக்கொண்டு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் அவர்களை நேரடியாகவே எதிர்த்தும் அவரை ஓவர்டேக் செய்தும் அரசியல் நடத்தி வருகிறார். அத்தோடு கடந்த தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதிக்கு திமுகவில் சீட் கேட்ட அத்தனைபேரிடமும் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை குற்றம் சாட்டுகின்றனர்.
பட்டுக்கோட்டை திமுகவில் ஏராளமான உட் பூசல்கள் இருந்து வருவது கட்சித் தலைமைக்கு தெரிந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிக்கிறதுஎன்று கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அத்தோடு ஆட்சிக்கு வந்து மிகக் குறைந்த நாட்களே ஆனதால் தற்பொழுது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என கட்சித் தலைமை எண்ணுவதாக கட்சித் தலைமையுடன் நெருக்கமாக உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலுக்கு மாவட்ட செயலாளரின் ஆதரவு பட்டுக்கோட்டை திமுக நகர பொறுப்பாளராக செயல்பட்டு வரும் எஸ்ஆர்என் செந்தில்குமார் அவர்களுக்கு இருந்து வருகிறது.
நகர பொறுப்பாளர் செந்தில்குமார் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே கட்சிக்காக சொத்துக்களை விற்று ஏராளமான தொகை செலவு செய்தும் கட்சிக்காரர்களை அனைத்து வார்டுகளிலும் நல்ல அனுசரிப்புடனும் நடத்துவதாகவும் திமுக அல்லாத மாற்றுக் கட்சியினரும் கூறி வருகின்றனர். அதேபோல எம்எல்ஏ அண்ணாதுரையின் ஆதரவு நகர பொறுப்புக் குழு உறுப்பினர்களில் ஒருவரான எஸ்கே செந்தில்குமார் அவர்களுக்கு இருந்து வருகிறது. இவர் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் பட்டுக்கோட்டை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களிலும் இவரது குடும்பத்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு பரம்பரிய பெயர்பெற்ற இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக திமுகவில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதோடு தன்னை தேடி உதவி என்று வருபவர்களுக்கு கட்டாயம் அவரால் முடிந்த உதவியை செய்து கொடுப்பது தொடர்ந்து நடைமுறையாக வைத்திருக்கிறார். இத்தோடு மட்டுமல்லாமல் கடந்த இரு முறை நகராட்சித் தலைவராக பதவி வகித்த முன்னாள் நகரச் செயலாளரான சீனி அண்ணாதுரை அவர்களின் சகோதரரான சீனி இளங்கோ இந்த முறை திமுகவில் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பல வருடங்களாக சீனி அண்ணாதுரை கடந்த காலத்தில் நகர செயலாளராக நல்ல முறையில் பணியாற்றி வந்த நிலையில் ஒவ்வொரு வார்டிலும் கிட்டத்தட்ட 33 வார்டுகளிலும் நல்ல செல்வாக்கை வைத்துள்ள இவர் தங்களுக்கு சீட் கொடுத்தால் கண்டிப்பாக செய்துவிடுவோம் என்றும் இரண்டு எழுத்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த மூன்று பேரில் ஒருவருக்கு சீட் கொடுத்தாலும் மற்ற இருவர்அதிர்ப்தி வேட்பாளராக மாறுவது நிச்சயம் என தலைமை எண்ணுகிறது.
இந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தமிழகத்திலேயே பட்டுக்கோட்டை நகராட்சியை மட்டுமே வென்றது. மதிமுக வேட்பாளரான ஜெயபாரதி விஸ்வநாதன் அறுதிப் பெரும்பான்மை ஓட்டுகள் பெற்று வென்று மதிமுகவுக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பட்டுக்கோட்டை தொகுதியை திமுக தலைவர் ஸ்டாலினிடமிருந்து டிமாண்ட் செய்து மதிமுகவிற்கு பெற்று வேட்பாளராக ஜெயபாரதி விஸ்வநாதனை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக மதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதையே அரசியல் விமர்சகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
திமுகவின் உட்கட்சிப் பூசலை தவிர்த்துக்கொள்ள கட்சித்தலைமை பட்டுக்கோட்டை நகராட்சியை மதிமுக வுக்கு கொடுத்துவிட வேண்டியதுதான் என முடிவு செய்திருப்பதாகவும் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதும் பெண் வேட்பாளரான ஜெயபாரதி விஸ்வநாதனுக்கு சாதகமாக இருந்துவருகிறது. எது எப்படியோ பட்டுக்கோட்டை நகராட்சியை 2001 க்கு பிறகு மதிமுக கைப்பற்றும் நிலை உள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவுற்ற நிலையில் மதிமுக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக தலைமை பட்டுக்கோட்டை, கோவில்பட்டி, சங்கரன்கோயில் உள்ளிட்ட நகராட்சிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பட்டுக்கோட்டை நகராட்சியை கேட்பதற்கு காரணம் கடந்த 2001 ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்திலேயே ஒரே ஒரு நகராட்சியாக பட்டுக்கோட்டை நகராட்சியை மட்டுமே மதிமுக கைப்பற்றியது. இதனால் பட்டுக்கோட்டை மதிமுக செல்வாக்குள்ள கட்சியாக கருதப்பட்டு வருகிறது. அப்போதைய மதிமுக சேர்மனான ஜெயபாரதி விஸ்வநாதன் கட்சிக்கு தீவிர விசுவாசியாக இருந்து வருபவர் என்பதால் மீண்டும் அவரை சேர்மனாக ஆக்கிவிட வேண்டும் என மதிமுக தலைமை எண்ணுகிறது.இவர் மதிமுக சேர்மனாக 2001 முதல் 2006 வரை இருந்து அதன் பிறகு 2006 லிருந்து 2011 வரை இவர் மதிமுக கவுன்சிலராக இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் திமுகவுடன் கூட்டணி உடன்பாடு வைத்து அதன்படி மீண்டும் ஜெயபாரதி விஸ்வநாதனை நகராட்சி சேர்மனாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மதிமுக தலைமைக்கு இருந்து வருவதால் திமுக தலைமையிடம் வலியுறுத்தி அதன்படி இருபத்தி ஏழாவது வார்டை மதிமுக விற்கு பெற்று வேட்பாளராக ஜெயபாரதி விஸ்வநாதனை அறிவித்துள்ளனர். ஜெயபாரதி விஸ்வநாதன் சேர்மன் வேட்பாளராக கருதப்பட்டு வரும் நிலையில் சேர்மன் கனவிலிருந்த ஒரு சில திமுக வேட்பாளர்கள் விரக்தியில் உள்ளனர்.