நீர்நிலைகளை பாதுகாப்பதில் இருந்து கடமை தவறுபவர்கள்; நீர் நிலைகளில் உள்ள இடங்களில், ‘லே அவுட்’டுக்கும், கட்டடம் கட்டவும் அனுமதி வழங்கி, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றி, குற்றவியல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கும்படி, உச்சகட்ட கோபத்துடன், தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், சில நாட்களுக்கு முன்விசாரணைக்கு வந்தன.
அப்போது இவ்வழக்கில், அரசு தரப்பில் அட்வ கேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, நீர் நிலைகள் பற்றிய விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலர், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். ‘நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையின் போது, ‘நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது; குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை முறையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும். ‘மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமல், அதிகாரிகள் கவனிக்க வேண்டும்’ என்றும், பொறுப்பற்ற அதிகாரிகளை, ‘சஸ்பெண்ட்’ செய்வது மட்டுமின்றி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, ‘ஆக்கிரமிப்பு நிலத்துக்கும், நீர் நிலைகளில் உள்ள நிலத்துக்கும் திட்ட அனுமதி வழங்கக் கூடாது’ எனவும், ‘குடிநீர் இணைப்பு வழங்கியிருந்தால் துண்டிக்க வேண்டும்’ எனவும் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்; குளங்கள், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
அவற்றின் மீதான விசாரணையில் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: அதிகாரப்பூர்வ இணையதளமான, ‘தமிழ் நிலத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள நீர் நிலைகளின் எல்லையை வரையறுத்து, அவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
சட்டத்தில் கூறியுள்ள நடைமுறைகளை பின்பற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
அதுகுறித்த அறிக்கையை, மார்ச் 31ல், தலைமை செயலர் தாக்கல் செய்ய வேண்டும்.நீர் நிலைகளை பாதுகாக்க தூர் வாருவது, சுத்தப்படுத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க வேலி அமைப்பது; கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது; பாதுகாவலர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் வராமல் தவிர்க்க, வருவாய் ஆவணங்கள், ‘தமிழ் நிலம்’ இணையதளத்தில் நீர் நிலைகளாக குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு, பத்திரப்பதிவுகளை அதிகாரிகள் மேற்கொள்ளக் கூடாது
கட்டுமானம் மேற்கொள்ள, நிலத்தை பதிவு செய்ய, ‘லே அவுட்’டுக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிப்பவர்கள், சொத்து வரி கணக்கீடு மற்றும் மின்சாரம், குடிநீர் இணைப்பு கோருபவர்களிடம், ‘இந்த இடம், நீர் நிலையில் இல்லை’ என்பதற்கான உத்தரவாதத்தை, அதிகாரிகள் பெற வேண்டும்
- குறிப்பிட்ட இடம் நீர் நிலையில் அமையவில்லை என்பதை, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்
- நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களுக்கு ‘லே அவுட்’ ஒப்புதல் மற்றும் கட்டட அனுமதி வழங்கியது, உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆக்கிரமிப்பில் இருந்து நீர் நிலையை பாதுகாக்காமல் கடமை தவறினாலும், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; குற்றவியல் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.