ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு நடத்தி திட்டமிடப்பட்ட பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் மத்திய ரெயில்வே மந்திரி, நிதி மந்திரி ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ரெயில்பாதை அமைத்திட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டது. இதுநாள் வரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை புதிய அகல ரெயில்பாதை 47.20 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 2013ஆம் ஆண்டு ரூ 325.70 கோடி மதிப்பீட்டில் இந்த ரெயில் பாதையை அமைத்திட ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தஞ்சாவூர், திருமானூர், அரியலூர் ரெயில் பாதை 50.35 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.452.08 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. மத்திய அரசு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, ஒரத்தநாடு, மேலஉளூர், தஞ்சாவூர், திருவையாறு, திருமானூர், அரியலூர் பகுதி மக்கள் பயனடைவார்கள். பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு எளிதில் ரெயில் மூலமாக சென்று வரலாம். அரியலூர் சிமெண்டு ஆலைகளில் இருந்து உற்பத்தியாகும் சிமெண்டு நாட்டின் தென்கோடி மக்களுக்கு இத்தடத்தின் வழியாக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதுபோல மற்ற சரக்கு போக்குவரத்திலும் இந்தத்தடம் பயனுள்ளதாக இருக்கும்.
மன்னார்குடி, பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை 41 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 2012ஆம் ஆண்டு இதற்கான விரிவான ஆய்வு நடந்தது. 2013 -2014ம் ஆண்டு முதல் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 2013ம் ஆண்டு பாமணி ஆறு, கண்ணன் ஆறு, நசுவினி ஆறு ஆகியவற்றில் பாலங்கள் கட்ட 2013ம் ஆண்டில் டெண்டர் விடப்பட்டு பாமணி ஆற்றில் மட்டும் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கப்பட்டது.
போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் இத்திடடம் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டம் செயல்படுத்தும்போது மன்னார்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, கோவை மற்றும் வடமாநிலங்களுக்கு புறப்படும் ரெயில்கள் பட்டுக்கோட்டை இருந்து புறப்படும். இதன்மூலம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் பெரும் சந்திப்பாக உருவெடுக்கும்.
அரியலூர், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புதிய அகல ரெயில் பாதை மற்றும் மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய ரெயில் பாதை அமைத்திட தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கம், வர்த்தக சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.
2024ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் பாதைகளையம் மின்மயமாக்க வேண்டும் என்று ரெயில்வே துறை திட்டம் தீட்டி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் பெரும்பாலான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. திருவாரூர் – காரைக்குடி அகல ரெயில் பாதை மற்றும் திருத்துறை பூண்டி அகஸ்தியம் பள்ளி அகல ரெயில் பாதை மின்மயமாக்கப்படாமல் இருக்கிறது.
திருவாரூர் – காரைக்குடி ரெயில் தடத்தில் கேட்கீப்பர்கள் நியமனம் செய்யப்பட்டு விரைவில் ரெயில்கள் இயக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் இந்த தடத்தையும் மினமயமாக்கப்படவேண்டும். டெல்டா பகுதிகளில் வளர்ச்சி அடைய வருகிற நாடாளுமன்ற பட்ஜெட்டில் பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் – அரியலூர் புதிய அகல ரெயில்பாதை, மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய அகல ரெயில் பாதைகளை அமைத்திடவும் திருவாரூர் – காரைக்குடி அகல ரெயில் பாதை மற்றும் திருத்துறைப் பூண்டி – அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதைகளை மின்மயமாக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.