மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தலம், திருவெண்காட்டில் புதன் தலம், கீழப்பெரும்பள்ளத்தில் கேது தலம் உள்ளிட்ட நவக்கிரக வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதேபோல பூம்புகார் சுற்றுலாத்தலமும் அமைந்து உள்ளது. அண்ணன் பெருமாள் கோவில், நாங்கூர் பெருமாள் கோவில், சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோவில்களும் அமைந்து உள்ளன. பழையார் மீன்பிடி துறைமுகம், பூம்புகார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களும் உள்ளன. இதன் காரணமாக சீர்காழிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை, புதுச்சேரி, கடலூர், மதுரை, வேளாங்கண்ணி, தஞ்சை உள்ளிட்ட தொலை தூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வராமல் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி புறவழி சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறார்கள்.
இரவு நேரத்திலும் இவ்வாறு இறக்கி விடுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அனைத்து பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு பஸ்கள் வரவில்லை என்றால் சீர்காழி புறவழிச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர்.