தஞ்சை மாநராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக கடும் நிதிசுமையில் சிக்கி தவித்தது. மாநகராட்சி ஊழியர்கள் மாத சம்பளம், மின் கட்டணம் போன்ற அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில் தான் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சரவணகுமார் தன் அதிரடியான நடவடிக்கையால் மாநகராட்சி வருமானம் பெருக்கி, நிதி பற்றாக்குறை போக்கியதுடன் வளர்ச்சி பாதையில் பயணிக்க வைத்துள்ளார்.
இவர் பொறுப்பேற்ற 100 நாட்களில் இதை சாத்தியமாக்கி தமிழ்நாட்டுக்கே தஞ்சை மாநகராட்சியை எடுத்துக்காட்டாக மாற்றியுள்ளார் என்று சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
தஞ்சையின் மையப் பகுதியாக சொல்லப்படுகிற 8 கி.மீ சுற்றளவு கொண்ட நகர் பகுதியுடன் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
அண்மைக்காலம் வரை வரி வசூலில் பின்தங்கி இருந்தது இந்த மாநகராட்சி. இதற்கு சொந்தமான இடத்தை குறைந்த வாடகைக்கு எடுத்து பின் அதிக வாடகைக்கு உள் வாடகைக்கு விட்டு தனிநபர்கள் ஆதாயம் அடைந்தார்கள். ஆனால் மாநகராட்சி வருமானம் பெருகவில்லை. சொத்து வரி, தண்ணீர் வரி உயர்த்த முடியாத நிலை இதுபோன்ற காரணத்தால் அதிக வருமானம் இல்லை. ஆகையால் நிதி சுமையில் சிக்கியது. ஊழியர்களுக்கு மாத சம்பளம், ஓய்வு பெற்றோருக்கு பென்சன், மின் கட்டணம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்நிலையில் 4 மாதம் முன் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சரவண குமார் அதிரடியான நடவடிக்கை, வருமானம் பெருக்கும் திட்டத்தோடு செயல்பட்டதால் மாநகராட்சி நிதியில்லாமை என்ற ஆபத்தான நிலையை கடந்ததாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் உரையாடினோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்ட 93 கடைகளை ஆணையர் சரவணக்குமார் ஓப்பன் டெண்டரில் விடும் ஏற்பாடை மேற்கொண்டார்.
ஏற்கனவே குறைந்த வாடகைக்கு எடுத்து நடத்தியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர். ஆனால் சரவணகுமார் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வழக்கை வென்றார். பின் 93 கடையை ஓப்பன் டெண்டர் முறையில் வாடகைக்கு விட்டார். ஒவ்வொரு கடைக்கும் அட்வான்சாக 5 லட்சம், வைப்பு தொகையாக 12 மாத வாடகையாக புதிய முறையை கொண்டு வந்தார்.
ஒரு கடையின் வாடகை 25 ஆயிரம் மேல் ஏலத்திற்கு சென்றது. இதன் மூலம் மொத்தம் 10 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. இதற்கு முன் 85 கடையின் 54 லட்சம் கிடைத்தது. புதிய வாடகை மூலம் ஆண்டுக்கு வருமானம் 4.75 கோடியாக உயர்ந்து உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் கழிப்பறை ஏலத்தில் விடப்பட உள்ளது. அதன் மூலம் மேலும் 1 கோடி வருமானம் கிடைக்க இருக்கிறது.
புதிய பேருந்து நிலையத்தில் 122 கடைகள் உள்ளன. அதை குறைந்த வாடகைக்கு எடுத்து உள்வாடகை விட்டுள்ளனர். அதையறிந்து அதையும் ஓப்பன் டெண்டர் விட்டனர். அதன்மூலம் முந்தைய 94.2 லட்சம் கிடைத்த நிலையில் கூடுதலாக 112 லட்சம் கிடைத்து மொத்தம் 206 லட்சமாக வருமானம் கிடைக்கின்றது.
கீழவாசலில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை வாடகைக்கு விட்டு வருமானத்தை பெருக்கினார். இன்னும் பெரிய மார்க்கெட் கடைகள் வாடகைக்கு விட வேண்டி உள்ளது. தான் பதவியேற்ற 100 நாட்களில் 20 கோடி அதிகமான வருமானம் கிடைக்க வைத்தார். 4 மாதத்தில் 350 கோடி மதிப்பிலான இடங்களை மீட்டிருக்கிறார். மீட்ட இடங்களில் வணிக நிறுவனங்கள் கட்டி வாடகைக்கு விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளால் பெறப்பட்ட வருமானம் மூலம் ஊழியர்களுக்கு மாத சம்பளம் , ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் தரப்பட்டது. பல முக்கியமான தேவைகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள பணம் மாநகராட்சி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டது.
ஆணையரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுகின்றனர்.
தஞ்சை ஆணையர் சரவணகுமார் போல் அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்பட தொடங்கினால் அரசிடம் நிதி பற்றாக்குறை என்ற பேச்சே இருக்காது என்று கூறுகின்றனர்.