மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் 19 போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் லலிதா வழங்கினார்.
மயிலாடுதுறையில் 73-வது குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் முன்னிலை வகித்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய 19 போலீசாருக்கு தமிழக முதல்-அமைச்சரின் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் லலிதா வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், உதவி கலெக்டர் பாலாஜி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ளவில்லை. முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விழா நடந்தது.