தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியின் அவலநிலை குறித்து சென்ற இதழில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்தொடர்ச்சியாக ஊராட்சி பொதுமக்கள் சிலர் நம்மை தொடர்பு கொண்டு மேலும் சில தகவல்களை கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 2021 – 2022 நிதியாண்டில் ஒட்டங்காடு ஊராட்சியில் பாரத பிரதமரின் தனிநபர் இல்ல கழிவறை திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த கழிவறைகள் பொதுமக்கள் கட்டிக்கொள்ள வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து அரசின் மானிய தொகையை பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் இங்கு 10வது வார்டை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் (தற்போது இவரின் மனைவி உறுப்பினராக உள்ளார்) ஒருவர் கழிவறை கட்ட தான் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், நான் தான் கட்டுவேன் என கூறி நூறு நாள் பணியாளர்களை கொண்டு கழிவறை தொட்டிகளை வெட்ட செய்து கழிவறைகளை கட்டியுள்ளார். அதுவும் 60 சதவீத பணிகளை மட்டும் முடித்துள்ளார். பொதுமக்கள் வழக்கம் போல் திறந்த வெளியைத்தான் கழிவறைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
நமது கேள்வி கழிவறை பணிகளை ஒப்பந்தம் செய்து வேலை செய்ய ஊராட்சி விதிகளில் வழிவகை உள்ளதா? நூறு நாள் பணியாளர்களை கொண்டு கழிவறை பணிகள் செய்ய இந்த மு.ஊ.ம. உறுப்பினருக்கு அதிகாரம் உள்ளதா? ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் ஒத்துழைப்போடுதான் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் திமுக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். இவரால் கட்டியதாக கூறப்படும் ஒரு கழிவறையின் மதிப்பு 7000 த்திற்குள் தான் வருகிறது. ஆனால் அரசு வழங்கும் மானியத் தொகை 12000 ரூபாய். அப்படி கட்டப்பட்டதாக கழிவறை அறிவிப்பு பலகையில் 2017 – 18 ம் நிதியாண்டில் கட்டப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. மீதத் தொகை எங்கே சென்றது? அரசின் மானியத் தொகை எந்த வகையில் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தான் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மேலும் அதே மு.ஊ.ம. உறுப்பினர் ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் அருகில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த கட்டிடம் கட்டுவதற்காக அங்கிருந்த பனங்கன்றுகளை அழித்துவிட்டு கட்டிடம் கட்டியுள்ளார்.
எனவே மேற்படி நபர் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் பேராவூரணி பிரிவு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அவர்கள் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றவாரா கோட்டாட்சியர்?