பணியின் போது தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி உற்சாகப்படுத்தி வெகுமதி வழங்கினார்.
தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் எழும்பூர் காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் தானியேல் குறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது. எழும்பூர் எல்ஜி ரவுண்டானா அருகில் முழு ஊடரங்கு வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொது ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தூய தமிழில் பேசி அறிவுரைகள் வழங்கினார். உதவி ஆய்வாளரின் இந்தப்பணியை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் தானியேலின் செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி உற்சாகப்படுத்தினார்.