தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை அடைய போகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 7 அன்று தூத்துக்குடியில், ஸ்பிக் நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்கா நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. ஆட்சி அமைந்து 10 மாதங்கள் முடிந்து 11-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் தூத்துக்குடியில் புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாள் தோறும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.
சொந்த தேசத்தில், சொந்த பணத்தில், சுயசார்பு பொருளாதாரத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும் என கனவு கண்டவர் தான் வ.உ.சிதம்பரனார். அவரது பொருளாதார கனவு நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்துள்ளது. நீர்வளம் நிறைந்த வேளாண் நிலமாகவும், தமிழரின் ஆட்சி, நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் நிலமாகவும் இந்த தூத்துக்குடி விளங்கி கொண்டிருக்கிறது. கிராமம் நகரமாகவும், நகரம் மாநகரமாகவும் மாற வேண்டும் என்பது தான் தி.மு.க. அரசின் கொள்கை. அதன் அடிப்படையில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
திராவிட மாடலை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறுகிய கால நல்வினைக்காக அல்ல. தமிழகத்தில் உள்ள மகத்தான வளங்களை பயன்படுத்தி நிகழ்காலம் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற லட்சியத்தில் நாம் உழைத்து கொண்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமது நோக்கம். தென்மாவட்டத்தை தொழில்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் என்ற நிலையை அடைய போகிறது. சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தொழில் பூங்காக்களில் முன்னிலை வகிக்கின்றன. இதில் இந்தியா பின்னடைந்துள்ளது. இதனால் உலக தரத்திற்கு இணையாக தூத்துக்குடியில் இருந்து 13 கி.மீ தொலைவில் சுமார் 1,150 ஏக்கரில் பர்னிச்சர் தயாரிப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.