கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தனியார் பள்ளிகளில் மெட்ரிகுலேசன் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கின்ற செயலும், பெற்றோர்கள் மீது சரியான அணுகுமுறை இல்லாததும் பல்வேறு இடங்களில் நடப்பதாக தங்களுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.
இதுபோன்ற செயல்கள் அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும். இத்தகைய செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபட கூடாது. சுற்றறிக்கையை மீறி கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரக்குறைவாக பேசி பெற்றோர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தண்டிப்பது அடிப்படை கல்வி உரிமையை மறுக்கும் செயல். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட ஆய்வு அலுவலர்கள், பள்ளி நிர்வாகங்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கக்கூடிய கட்டணத்தை செலுத்தவில்லை எனில் அந்த மாணவர்களுக்கு டிசி வழங்குவது, வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் இருப்பது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.