தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-ஒன் என்ற நிலையை அடையப் போகிறது என்று தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளது மகிழ்ச்சி என்றாலும், இதே தமிழகத்தில்தான் இன்னும் பல அரசு அலுவலகங்களை தொடர்புகொள்ள தொலைபேசி நம்பர் ஒன்று கூட இல்லையே என்னும் நிலை உள்ளது.
ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அரசு துறைகளுக்காக எண்களை வழங்கியிருக்கும் போதும் அவற்றை தொடர்பு கொண்டால் பதிலளிக்க பெரும்பான்மை நேரங்களில் யாரும் இல்லை. இப்படி தொடர்பு கொள்ள எண்கள் இருந்தாலும் அவைகள் பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே உள்ளது என்பது கசப்பான உன்மை.
அரசு என்னும் மாபெரும் இயந்திரத்தை இயக்குவது பலநூறு பகுதிகளாக பிரிந்து இயங்கும் அரசு அலுவலகங்கள் தான். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வட்டாட்சியர் அலுவலகங்களும் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களும்தான். இந்த இரு முக்கிய அலுவலகங்களும் ஒட்டுமொத்த அரசின் பிரதிநிதிகளாக சாமானிய மக்கள் முன் விளங்குகிறது.
இப்படி இருக்க பெரும்பான்மை அலுவலகங்களில் பொது தகவல் அலுவலர்கள் யார் என்பதும் அவர்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமென்பதும் இன்னும் பல சாமானிய மக்களுக்கு தெரிவதில்லை. காரணம் அவர்களை சாமானிய மக்கள் பார்வைக்கு அடையாளப்படுத்தும் ஒரு குறியீடுகூட பல அலுவலகங்களில் இல்லை.
சில நேரங்களில் செய்தி சேகரிக்க சென்ற நமது நிருபர்களே அதிகாரிகளை அடையாளப்படுத்துவதிலும் தொடர்பு கொள்வதிலும் சற்று சிரமப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு முறை நாம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவரை தொடர்பு கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இணையதளத்தில் தொடர்பு எண்ணை பெற்று தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசிய அதிகாரி பணி ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் இன்னும் அவருடைய தொலைபேசி எண் மாற்றப்படாமல் இருப்பதாகவும் நம்மிடம் அவர் தெரிவித்தார்.
இப்படி இருக்க சாமானிய மக்களின் நிலையை எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக விளங்கிகொண்டிருக்கும் நமது தமிழ்நாட்டில் இன்னுமே சில அடிப்படை பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது என்பது ஆச்சரியத்தையும் சற்று வேதனையையும் தருகிறது.
இது போன்ற எளிதில் தீர்க்கக் கூடிய இடர்பாட்டை அந்தந்த அலுவலக உயர் அதிகாரிகளே சரி செய்ய முடியும் என்ற நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நிலை உருவாகாமல் இருக்கும் என நம்புவோம்.