புதுக்கோட்டையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு சம்பந்தமாக 9 பிடிஓக்கள் உள்பட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2014 முதல் 2015ம் ஆண்டு வரை இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் 2 பயனாளிகள், 2016 முதல் 2019ம் ஆண்டு வரை 9 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்காமல் வீடு கட்டியதாக சிமென்ட், கம்பிகள் வாங்கியதாக ரூ 17.70 லட்சம் முறைகேடு நடந்திருப்பதும், இதில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதனால் கந்தர்வ கோட்டை முன்னாள் பிடிஓ ரோஸ்லின், கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் பிடிஓ முத்து, கந்தவர்கோட்டை முன்னாள் பிடிஓ ஆறுமுகம், தற்போது திருச்சி மாவட்ட ஊராட்சி செயலாளர், கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் பிடிஓ மகாலிங்கம், (தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்), கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் பிடிஓ குமரன், (ஆவுடையார் கோவில் பிடிஓ), கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் மண்டல துணை பிடிஓ காமராஜ் (கறம்பக்குடி பிடிஓ), கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் மண்டல துணை பிடிஓ சண்முகாதேவி (கந்தர்வகோட்டை ஒன்றிய துணை பிடிஓ), கந்தர்வகோட்டை ஒன்றிய மண்டல துணை பிடிஓ மயில்வாகனன், கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் உதவி பொறியாளர் இளங்கோ, கந்தர்வகோட்டை ஒன்றிய உதவி பொறியாளர் சிவபிரகாசம், கந்தர்வகோட்டை முன்னாள் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சுரேஷ் (குளத்தூர் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்), கந்தர்வகோட்டை ஒன்றிய முன்னாள் பணி மேற்பார்வையாளர் சபியுல்லா (பொன்னமராவதி பணி மேற்பார்வையாளர்), குளத்தூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் (கந்தர்வகோட்டை ஊராட்சி செயலாளர்), குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாதேவன் ஆகியோர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 21ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.