காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 2308 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிபறி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 26 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 15 நபர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைதியை பேணுவதற்கான பிணையமும், நன்னடத்தைக்கான பிணையமும் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 5 ரவுடிகள் உட்பட 8 நபர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 1684 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது.