தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக அஞ்சுகம் பூபதி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க. 36 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்களிலும் என தி.மு.க. கூட்டணி 40 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும், பா.ஜ.க., அ.ம.மு.க. தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தஞ்சை மாநகராட்சின் மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் 45-வது வார்டு கவுன்சிலர் சண்.ராமநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தஞ்சை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயருக்கான தேர்தல் நடந்தது. சண்.ராமநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் களம் இறங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் சண்.ராமநாதன் 39 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் மணிகண்டன் 11 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சண்.ராமநாதனை மேயராக ஆணையர் சரவணகுமார் அறிவித்து, அதற்கான சான்றிதழையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சில கவுன்சிலர்கள் மேயர் சண்.ராமநாதனை வாழ்த்தி பேசினர்.
மாநகராட்சி அலுவலக நுழைவு பகுதியில் புதிய மேயரான சண்.ராமநாதனுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. சார்பில் துணை மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 51-வது வார்டு கவுன்சிலர் அஞ்சுகம் பூபதி 42 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் காந்திமதி 8 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 42 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அஞ்சுகம்பூபதியை துணை மேயராக ஆணையர் அறிவித்து, அதற்கான சான்றிதழை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், துணை மேயர் அஞ்சுகம் பூபதியை வாழ்த்தி பேசினர். இதையடுத்து துணை மேயர் அஞ்சுகம் பூபதிக்கு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், உறவினர்கள் மாலை, பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.