சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெரியார் வேடமிட்டு குழந்தைகள் நடத்திய நாடகம் பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பெரியார் வேடமிட்ட குழந்தைகளை தாக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-எட்டயபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் அந்த மோசமான கருத்தை பதிவிட்டார் என்பது தெரியவந்தது.
இந்த கைதை தொடர்ந்து சென்னையில் தன்னை இந்துத்துவ தீவிரவாதி என்று கூறிய நபரும் கைது செய்யப்பட்டார். மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியம் என்ற நபர் காந்தியை கோட்ஸே சுட்டதற்கு முன் அம்பேத்கரை சுட்டிருக்க வேண்டும், பெரியாரை சுட்டிருக்க வேண்டும், முகமது அலி ஜின்னாவை சுட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து அவரும் கைதானார். இப்படி சமூக வலைத்தளங்களில் வைரலான விஷயங்களால் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் இரண்டு கைதுகள் அரங்கேறின.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்களை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். கடந்த வருடமே இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதிலும் தலைவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப கூடாது. இணையத்தில் பாலியல் ரீதியான குற்றங்களை செய்ய கூடாது. பெண்களை இழிவுபடுத்த கூடாது. இணையத்தில் மோசடி சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் சார்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில், இணையத்தில் மோசடிகள் விதவிதமாக நடக்கின்றன. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடிகளை செய்கின்றனர். பொய்யான விளம்பரங்களை இணையத்தில் பரப்புகின்றனர். அரசு வேலை வாங்கி தருவதாக இணையம் மூலம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பல்கள் உள்ளன.
இதை மக்கள் சிலரும் கூட நம்பி ஏமாறுகின்றனர். நாம் பார்க்கும், கேட்கும் செய்திகளை அப்படியே நம்பி விட கூடாது. எதில் என்ன உண்மை இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். இதற்கு புத்தகங்களை படிப்பது அவசியம். பகுத்து அறிய கூடிய திறன், தெளிவான முடிவு எடுக்க கூடிய திறன் இதன் மூலம் கிடைக்கும். சிலர் இணையத்தில் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்ட நபர்கள் இப்படி செய்கிறார்கள்.
இப்படி சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவது தவறு. இவர்களை கண்டறிந்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் பொய்யான கருத்துக்களை பரப்ப கூடாது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களை கண்காணித்து வருகிறோம் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.