புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்திற்குட்பட்ட நல்லூர், மேலத்தானியம், காரையூர் மற்றும் சடையம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 500 முதல் 600 மாணவர்கள் வரை பயின்று வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு அரசு நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து வருகின்றனர்.
காலை 9.30 மணிக்குள் பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பேருந்து இல்லாததால் காலை 7 மணிக்கே காலை உணவையும் சேர்த்து கட்டிக் கொண்டு 8 மணிக்கு முன்பே பள்ளிக்கு வந்து காத்திருக்கின்றனர். பள்ளி திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே இம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிடுவதால் மாணவ, மாணவிகளிடையே ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
நல்லூர் மேல்நிலைப் பள்ளிக்கு சித்தூர், அன்னை நகர், குமரமலை போன்ற ஊர்களில் இருந்து வருகை தரும் மாணவர்கள் மற்றும் மேலத்தானியம், காரையூர் பள்ளிகளுக்கு அரசமலை, வெல்லக்குடி, கீழத்தானியம், சம்பப்பட்டி, முள்ளிப்பட்டி, ஊனையூர், கண்ணுக்குழி, கீழக்குறிச்சிப்பட்டி போன்ற ஊர்களில் இருந்து வருகை தரும் மாணவர்கள் இதுபோன்ற அவல நிலைக்கு பெரிதும் ஆளாகின்றனர்.
மேலே குறிப்பிட்ட ஊர்களுக்கெல்லாம் ஒரு பேருந்து மட்டுமே வருவதால் வெளியூரிலிருந்து பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கும், மீண்டும் மாலையில் வீட்டுக்குச் செல்வதற்கும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் விடுவது அல்லது பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைத்து மாணவர்களின் துயரைப் போக்க நடவடிக்கை எடுப்பாரா? என்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.