பேராவூரணி தனியார் திருமண அரங்கில் போலீஸ் துறை சார்பில் குற்றச்செயல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம் மது அமலாக்கப் பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.
காவல்துறை ஆய்வாளர்கள் பேராவூரணி செல்வி, சேதுபாவாசத்திரம் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சி பெருந்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறை சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் முக்கியமான சாலை பகுதிகளில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்தும்,பெண்களுக்கான பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றச் செயல்களை தடுப்பது குறித்தும், கள்ளச்சாராயம், கள்ள மது விற்பனை, கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.