மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை
தங்கம், பெட்ரோல் விலைக்கு நிகராக காகித விலை தினமும் உயர்ந்து வருகிறது. இரட்டிப்பாகிவிட்ட அச்சு காதித விலை உயர்வால் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காகித விலை உயர்வால் பத்திரிகைகளின் அச்சு செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சிறிய பெரிய என அனைத்து அச்சு ஊடக நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளது.
டிஜிட்டல் மீடியாக்களில் நம்பகத்தன்மை என்பது சிறிதும் இல்லாத ஒரு சூழலில் பெரும்பான்மை மக்கள் நம்பகமான செய்திகளுக்கு நம்பியிருப்பது அச்சு ஊடகங்களைத்தான். எதிர்கால இலாபங்களைக் கருத்தில் கொள்ளாமல் பல அநீதிகளை அச்சு ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. கருத்துரிமைக்கான களத்தில் அச்சுப்பத்திரிகைகளின் இடம் அசைக்க முடியாததாகிறது. குரலற்றவர்களின் குரல் பொதுச்சமூகத்தின் காதுகளை எட்டவும் அச்சுப் பத்திரிகை பிழைத்திருக்க வேண்டியது அவசியம்.
சாட்டிலைட் சேனல்களின் பெருக்கம், இணையப் பயன்பாடு, ஸ்மார்ட் போன்களின் பரவலாக்கம், டிஜிட்டல் ஊடகங்கள், வாசிப்புப் பழக்கம் குறைந்து போனது, அரசின் கெடுபிடிகள் என எத்தனையோ இடர்ப்பாடுகளை அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் அச்சு காகித விலை உயர்வு பத்திரிகைத்துறைக்கு பேராபத்தை விளைவிக்கும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி காகித விலை உயர்வை கட்டுப்படுத்தி, விலை உயர்வை குறைத்து பத்திரிகைத்துறையை காத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.