காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகரில் பழைய பால்பண்ணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதை சீர்செய்யும் பொருட்டு, காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின்படி, புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல் (Timer) அமைக்கப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக பரிசோதனை முறையில் (முன்னோட்டம்) செயல்படுத்தப்பட்டு வந்தது. மேற்கண்ட பரிசோதனை முறையில் சிக்னல் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, 04.05.22ந்தேதியன்று புதிய போக்குவரத்து சிக்னலை முறைப்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்கள்.
மேலும் பொதுமக்கள் சிக்னலை கவனித்து வாகனங்களை ஓட்டுவதற்கும், அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கவும், ஒலி பெருக்கி சாதனம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த சிக்னலில் ITMS Camera (Intelligent Traffic Management System Camera)அமைக்கப்பட்டுள்ளது. பழைய பால்பண்ணை சந்திப்பை கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் போக்குவரத்து விதியை மதித்து வாகனங்களை இயக்கி, விபத்தினை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து விதிகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சீராக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல் ஏற்படுத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.