சென்னை, வேளச்சேரி பகுதியில் 05.05.2022 அன்று மதியம் கலையரசன் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச்சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிகண்டன் (எ) மதுரைமணி ஆகிய இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு மணிகண்டன் (எ) மதுரை மணி தனது நண்பர்களான கோபி, மணிகண்டன் (எ) E.B. மணிகண்டன், சுரேஷ் (எ) டால்பின் சுரேஷ், நேதாஜி (எ) பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து காரில் வேளச்சேரி, சக்தி பிராய்லர் கடை முன்பு வந்து கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த வினோத்குமார் அவரது நண்பர்கள் சுதாகர், பாலாஜி, ராஜா ஆகியோரிடம் மதியம் நடந்த சம்பவம் தொடர்பாக சமாதானம் பேசிய போது ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கத்தியால் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சுதாகர், ராஜா, பாலாஜி மற்றும் மணிகண்டன் (எ) மதுரை மணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வினோத்குமார் வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் (எ) EB மணி, நேதாஜி (எ) பிரபாகரன், சுரேஷ் (எ) டால்பின் சுரேஷ், 4) கோபி ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன் (எ) மதுரை மணி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், வேளச்சேரி காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய வினோத்குமார் என்பவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.