மனு நாள் என்பது தொன்றுதொட்டு அரசர் காலத்தில் இருந்தே இருந்து வரும் வழக்கமான ஒரு நடைமுறை. நல்ல ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை போக்கி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியும் மக்களிடம் அரசின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்துவது நமது தமிழர் மரபாகவே இருந்து வருகிறது. அரசர் காலம் முதல் இன்று ஆட்சியாளர் காலம் வரை இந்த நடைமுறை காலத்திற்கேற்ப பல்வேறு வடிவங்கள் பெற்றுள்ளது நீதிமான் அரசர்கள் ஓரறிவு ஜீவன்கள் முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை அனைவருக்கும் நீதி சமம் என்று கருதியதால்தான் தான் பெற்ற மகனை தேர் ஏற்றி கொன்ற வரலாறு படைக்கப்பட்டது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று அறிந்து இருந்ததால்தான் அரசர்கள் மற்றும் அரசவை அமைச்சர்கள் ஒரு புகாரின் மீதான நீதி உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்தனர் இதன்காரணமாகவே தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்றே கொள்வார் என்ற பழமொழி உருவானது. ஆனால் இன்றைக்கு நிலை அப்படி உள்ளதா என்று கேட்டால் அதற்கான பதில் நாம் அனைவரும் அறிந்ததே.
வாரம்தோறும் முதல் நாள் மனுநாள் என்று அனைத்து ஆட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களின் மனுக்கள் பெறப்படுவது வழக்கம். பெரும்பான்மை நேரங்களில் ஆட்சியர் நேரடியாகவும், முடியாதபட்சத்தில் நேர்முக உதவியாளர்கள் மூலமாகவும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் மனுக்களின் நிலையை அறிந்துகொள்ள தமிழக அரசு தனியே ஒரு இணையதளத்தை (https://gdp.tn.gov.in) உருவாக்கி நிர்வகிக்கிறது என்பது மக்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்பது நமக்குத் தெரியவில்லை.
‘இவ்வாறு பெறப்படும் மனுக்களின் நிலைமை என்ன?’ என்பதை நமது நிருபர் ஒருவர் ஒரு இளைஞரிடம் கேட்டபோது அந்த இளைஞர் கூறிய பதில் நம்மை சிந்தனையில் ஆழ்த்தியது. அந்த இளைஞர் “வட்டாட்சியர் கோட்டாட்சியர் என்று அலைந்து திரிந்து குறைகள் தீர்க்கப்படாத பட்சத்தில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தால் மனுவை வாங்கி நம்பர் ஆக்கி சுவற்றில் எறியப்பட்ட பந்து போல மீண்டும் வட்டாட்சியர் கோட்டாட்சியர் என்று பரிந்துரைத்து அனுப்பப்படுகிறது” என்றார்.
அனுப்பப்பட்ட பின் அந்த மனுவின் நிலையை கண்காணிப்பது யார்? முதலமைச்சரின் தனிப்பிரிவு போல ஆட்சியரிடம் கொடுக்கும் மனுக்களுக்கும் கால அவகாசம் உண்டா? இதை கண்காணிக்க தனியே ஏதேனும் அதிகாரிகள் உள்ளனரா? அப்படி இருந்தால் அவர்கள் யார்? அவரை எங்கு சென்று தொடர்பு கொள்வது?. பரிந்துரைத்த அனுப்பப்பட்ட மனுவின் நிலையை யாரிடம் சென்று கேட்பது? வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தால், ‘அங்கு செல்லுங்கள்.. இங்கு செல்லுங்கள்’ என்றும் a2, a3, a4 மற்றும் தபால் பிரிவு அதிகாரி என்று ஒருவரை மற்றி ஒருவர் அவரிடம் உள்ளது இவரிடம் உள்ளது என்று கடைசி வரை யாரிடம் இருக்கிறது என்று தெரியாமல் போகிறது.
வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர்கள் யாரேனும் ஒருவர் விடுமுறையில் இருக்கிறார் என்றால் அவரின் வேலையை செய்வது யார்? ஒருவேளை அந்த உதவியாளர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் வரை விடுமுறை எடுக்கிறார் என்றால் அந்த ஒரு மாதம் வரை அந்த மனுவில் நிலை என்ன? இதற்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு பதிலளிப்பது யார்? இப்படி தான் கொடுத்த ஒரு மனுவிற்காக அன்றாட கூலி வேலை செய்யும் ஒரு நபர் அலைந்து திரிந்தால் அவரின் குடும்ப சூழ்நிலை என்னவாகும், அவரின் வாழ்வாதாரத்துக்கு என்ன பதில்?
இவற்றின் உச்சமாக ஆட்சி மாற்றத்திற்குப் பின் பொலிவு பெற்ற திட்டங்களில் ஒன்று முதலமைச்சரின் தனிப்பிரிவு. மனு கொடுத்த 30 நாட்களில் தீர்வு என்று அதிரடியாக தொடங்கப்பட்ட திட்டம் அதன் நிலைமையும் இதுதான். எங்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பப்படுகிறது தவிர அதன் மீதான நடவடிக்கை கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்காக நாம் அரசை குறை கூறவில்லை, காரணம் அரசால் சட்டங்கள் இயற்ற முடியுமே தவிர அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசு அதிகாரிகள்தான். முதல்வரால் ஒரு திட்டம் அறிவிக்க முடியுமே தவிர எல்லா வேலைகளையும் எல்லா நேரங்களிலும் அவரே செய்துகொண்டு இருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் ஐம்பதாண்டுகளுக்கு அதிகாரிகள் அவர்கள்தான். அரசு என்னும் இந்த மாபெரும் கட்டமைப்பு இயந்திரத்தை இயக்குவது ஆட்சியாளராக இருந்தாலும் இயங்குவது அதிகாரிகள்தான். சமீபத்திய செய்திகளில் மாவட்ட ஆட்சியரால் அதிகாரிகள் கொத்துக்கொத்தாக மாற்றம் என்றெல்லாம் படிக்கும்போது பாவம் அந்த ஆட்சியர் என்னதான் செய்வார் என்று நமக்கே ஒரு பக்கம் தவறான அதிகாரிகள் மீது கோபம் வரத்தான் செய்கிறது. சில அதிகாரிகளின் மெத்தன போக்கானது பசி, தூக்கம், உறவுகள் என்று எல்லாவற்றையும் தியாகம் செய்து ஓய்வின்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு உழைக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் அவர்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்துகிறது.
சென்ற வாரத்தில் கூட கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர்,தவறுகள் பல அரங்கேறி இருப்பதை கண்டுபிடித்து சுமார் 50 கோட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்தார் இதுபோன்று ஒவ்வொரு அலுவலகத்திற்கும் முதல்வரை நேரில் வந்து ஆய்வு செய்ய முடியுமா அப்படி முதல் முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றால் எதற்காக இந்த அதிகாரிகள் இவர்களின் வேலைதான் என்ன ?
இந்த நிலையை எப்போது மற்றம் பெறும்? மனுக்களாக தேங்கி நிற்கும் மக்களின் குறைகளைத் தீர்க்க போவது யார் ? மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுமா இப்போது இருக்கும் நடைமுறை கட்டமைப்பில் ?