இந்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கடந்த 2015 முதல் வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆவுடையார் கோயில் ஒன்றியத்தில், சுமார் 435 வீடுகள் கட்டப்படாமலேயே, கட்டப்பட்டிருப்பதாகக் கணக்கு காட்டி முறைகேடு நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆவுடையார் கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 முதல் 2020 வரை மட்டும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1,869 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
இவற்றில், சுமார் 435 வீடுகள் கட்டுவதற்கான எந்தவித வேலையும் நடைபெறாத நிலையில், அங்கெல்லாம் வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக, அதிகாரிகளால் கணக்கு காட்டப்பட்டு, ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, 2016-20 காலகட்டத்தில் பணிகளை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட பி.டி.ஓ உள்ளிட்ட தொடர்புடைய 25 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் கேட்டபோது, “ஆவுடையார் கோயில் ஒன்றியத்தில் பல வீடுகள் கட்டப்பட்டாமலேயே, கட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருப்பதாக புகார் மனு வந்தது. அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஒன்றியத்தில் 2016-20-க்குள் 1,869 பயனாளிகளுக்கு ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேலை நடைபெற்றிருக்கிறது. இவற்றில், சுமார் 115 வீடுகளுக்கு பேஸ்மென்ட் என்ற அளவில் வேலை நடந்திருக்கிறது. 435 வீடுகளுக்கு எந்தவித வேலையும் நடைபெறவில்லை. இதில் ரூ.7 கோடி வரையிலும் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதும் எனக்குத் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அந்தப் பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் அப்போது பணியிலிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா இல்லை போலி கணக்கு காட்டி முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தொடர்ந்து மற்ற ஒன்றியங்களிலும் இது போன்ற முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம். இந்த விஷயத்தில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.